சென்னையில் தெருக்களில் ஏஐ கேமராக்கள் பொருத்தப்பட்டு, போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. குப்பை கொட்டுதல் போன்ற குற்றங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டு, வசூல் செய்யப்படுகிறது.
சென்னை நகரம் முழுவதும் தெருக்களில் ஏஐ கேமராக்கள் பொருத்தும் பணி தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக, ஜிஎஸ்டி சாலை மற்றும் அண்ணா நகர் பகுதிகளில் இந்த கேமராக்கள் நிறுவப்படுகின்றன.
கடந்த காலங்களில் குடித்து வாகனம் ஓட்டினால் ₹1,000 முதல் ₹1,500 வரை அபராதம் விதிக்கப்பட்டது. தற்போது புதிய விதிகளின்படி, இத்தகைய குற்றத்திற்கு ₹10,000 அபராதம் மற்றும்/அல்லது 6 மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். மீண்டும் மீண்டும் குற்றம் செய்வோருக்கு ₹15,000 அபராதம் மற்றும்/அல்லது 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும்.
அபராதத் தொகை அதிகரிப்பு:
சீட் பெல்ட் கட்டாமல் வாகனம் ஓட்டும் பழக்கத்திற்கும் கடுமையான அபராதம் விதிக்கப்படுகிறது. முந்தைய ₹100 அபராதம் தற்போது ₹1,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. வாகனம் ஓட்டும் போது மொபைல் போனைப் பயன்படுத்தினால், இப்போது ₹5,000 அபராதம் விதிக்கப்படுகிறது. உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ₹5,000 அபராதம் விதிக்கப்படும். டிரிபிள் ரைடிங் செய்வதற்கும் அபராதம் ₹100 இருந்து ₹1,000 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் வசூல் நிலவரம்:
மாநகராட்சி நிர்வாகம் சட்டவிரோதமாக குப்பை கொட்டுவது, கழிவுகளை பிரிக்காமல் இடுவது, கால்நடைகளை சாலையில் விடுவது போன்ற குற்றங்களுக்கு நேரில் அபராதம் விதிக்கிறது. இதற்காக 468 பாயின்ட் ஆஃப் சேல் (PoS) கருவிகள் வாங்கப்பட்டு, அதன் மூலம் ₹5 லட்சம் வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இதுவரை குப்பை தொடர்பான சட்டங்களை மீறியதற்காக ₹17.96 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதை கண்காணிக்க அதிகாரிகள் மற்றும் துப்புரவு ஆய்வாளர்கள் பயன்படுத்தும் வகையில் 15 பறக்கும் படை வாகனங்கள் தற்போது பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
அபராதம் செலுத்தும் முறை:
அபராத தொகைகளை UPI, டெபிட்/கிரெடிட் கார்டு, டி.டி. அல்லது காசோலையால் செலுத்தலாம். இதன் மூலம் பணம் நேரடியாக மாநகராட்சிக்கு செல்வதால் ஊழல் வாய்ப்பு குறைய உள்ளது.
