புதுடெல்லி, நவ. 16-
பிரதமர் மோடி அறிவித்த ரூ.1000, ரூ500 நோட்டுக்கள் செல்லாத திட்டத்தை திரும்பப் பெற்று, உச்சநீதிமன்றம் கண்காணிப்பில் விசாரணைக்குழு அமைக்க வேண்டும் என டெல்லி சட்டப் பேரவையில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று தலைமையில் ஆம்ஆத்மி கட்சி தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியது.
இந்த மோசடியான திட்டத்தால், நாட்டில் உள்ள ஒரு குறிப்பிட்ட கட்சி மட்டுமே பலன் அடைகிறது என கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார்.
எதிர்ப்பு
நாட்டின் கருப்பு பணத்தையும், கள்ளநோட்டையும் ஒழிக்கும் நோக்கில் கடந்த 8-ந்தேதி பிரதமர் மோடி அறிவித்த ரூ.500, ரூ1000 நோட்டு செல்லாத என்ற அறிவிப்பை தொடக்கத்தில் இருந்து ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் கடுமையாக எதிர்த்து வருகிறார்.
அவசரக் கூட்டம்
இந்நிலையில், ஆம்ஆத்மி கட்சி பெரும்பான்மையாக இருந்து ஆட்சி அமைக்கும், டெல்லியில் சட்டப்பேரவையில், மோடியின் அறிவிப்பை எதிர்த்து நேற்று தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது. இதற்காக அவசர ஒருநாள் சட்டப்பேரவைக் கூட்டம் நேற்று கூட்டப்பட்டது.
இந்த கூட்டத்தில் ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பை மத்திய அரசு திரும்பப் பெறுவது குறித்து முதல்வர் கெஜ்ரிவால் தீர்மானம் கொண்டு வந்தார்.
தீர்மானம்
அப்போது அவர் பேசுகையில், “ நாட்டில் ரூ.1000, ரூ.500 நோட்டுக்களை செல்லாது என்ற கொடூரமான அறிவிப்பில் குடியரசுத் தலைவர் தலையிட்டு, அரசு திரும்பப் பெற உத்தரவிட வேண்டும். இந்த மோசடியான திட்டம் ஒரு குறிப்பிட்ட கட்சி மட்டும் கள்ளச்சந்தையில் லாபம் பெறும் நோக்கில் கொண்டு வரப்பட்டது. ஆதலால், உச்சநீதிமன்றம் கண்காணிப்பில் இந்த திட்டம் குறித்து உயர்மட்ட விசாரணைக்குழு அமைக்க வேண்டும்'' எனத் தீர்மானம் கொண்டு வந்தார்.
அப்போது, எதிர்க்கட்சியான பா.ஜனதா எம்.எல்.ஏக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததால், அவை 15 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது.
கடும் விமர்சனம்
அதன் பின் மீண்டும் அவை கூடியபோது, ஆம்ஆத்மி எம்.எல்.ஏ. அமனாத்துல்லா கான் பேசுகையில், “ நாட்டில் உள்ள சாமானியர்களின் குடும்பங்கள் சந்திக்கும் துன்பங்கள் குறித்து மோடிக்கு புரியவில்லை. ஏனென்றால், அவருக்கு மனைவியும், கிடையாது, குழந்தையும் இல்லை'' என்றார்.
ஒத்திவைப்பு
இதற்கு பா.ஜனதா கட்சியின் எம்.எல்.ஏ.வும் எதிர்க்கட்சித்தலைவரான விஜேந்தர் குப்தா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து, கெஜ்ரிவால் குறித்த தனிப்பட்ட விமர்சனங்கள், குற்றச்சாட்டுக்களை கூறினார். இதனால், அவையில் பெரும் குழப்பமும், கூச்சலும் ஏற்பட்டு ஒத்திவைக்கப்பட்டது.
முன்னதாக அவை தொடங்கு முன், ரூபாய் நோட்டு செல்லாத அறிவிப்பால், வங்கியில் பணம் பெற வரிசையில் நின்று உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
