கொரோனா பரவல் காரணமாக, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு குலுக்கல் முறையில் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் மற்றும் அங்கப்பிரதட்சணை அனுமதி சீட்டு நேரில் வழங்குவது கடந்த 2020 மார்ச் மாதம் 20 ஆம் தேதியில் இருந்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

திருப்பதி - ஆர்ஜித சேவை டிக்கெட் :

இரண்டாண்டுகளுக்கு பிறகு தற்போது ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் மூலம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யும் நடைமுறை மீண்டும் தொடங்கி உள்ளது. திருப்பதியில் உள்ள விஜயா வங்கி கவுண்டரில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பின் நேற்று முதல் ஏழுமலையான் கோவில் நடைபெறும் கட்டண சேவைகளுக்கான டிக்கெட்டுகள் விற்பனை மீண்டும் துவங்கி உள்ளது. எனவே பக்தர்கள் வரிசையில் நின்று டிக்கெட்களை பெறுவதற்காக ஆதார் அட்டைகளை சமர்ப்பித்து தங்கள் பெயர் விவரங்களை பதிவு செய்து வருகின்றனர். 

சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, கல்யாண உற்சவம், டோலோட்சவம், வசந்த உற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை ஆகியவை உள்ளிட்ட சேவைகள் தினமும் நடைபெறும். அதற்காக ஏழுமலையான் கோவிலில் நாளை நடைபெற இருக்கும் கட்டண சேவைகளில் பங்கு பெற விருப்பம் தெரிவித்த பக்தர்கள் தங்கள் பெயர், விவரங்களை பதிவு செய்து வருகின்றார்கள். விபரங்களை பதிவு செய்த பக்தர்களில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் பக்தர்களுக்கு கட்டண சேவை டிக்கெட்டுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் மூலம் நடைபெறும் குழுக்கள் திருப்பதி மலையில் உள்ள மத்திய வரவேற்பு நிலையம் அருகில் அமைக்கப்பட்டிருக்கும் எல்இடி திரையில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும். குலுக்கல் முறையில் கட்டண சேவைகளில் பங்குபெற வாய்ப்பு கிடைக்கும் பக்தர்கள் மாலை பணம் செலுத்தி டிக்கட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுமண தம்பதிகள், திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட மணமக்கள் ஆகியோர் திருமண பத்திரிக்கையை காண்பித்து ஒருநாள் முன்னதாக ஏழுமலையானின் கல்யாணம் உற்சவத்தில் கலந்து கொள்வதற்கு தேவையான டிக்கெட்டுகளை பணம் செலுத்திப் பெற்றுக் கொள்ளவும் வாய்ப்புகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

டோக்கன்கள் - தள்ளிவைப்பு :

மேலும், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அங்கப்பிரதட்சணம் செய்வதற்கான டோக்கன்கள் வழங்குவது ஏப்ரல் 2ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முதியோர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஏப்ரல் மாதத்தில் சுவாமி தரிசனம் செய்வதற்கான சிறப்பு வரிசையில் அனுமதிக்க டோக்கன்கள் ஏப்ரல் 8ம் தேதி காலை 11 மணிக்கு தேவஸ்தான இணையத்தில் ஆன்லைனில் வெளியிடப்படும்.

தேவஸ்தான மென்பொருளில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏப்ரல் 1ம் தேதிக்கு வழங்கப்படுவது ஏப்ரல் 8 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 1000 டோக்கன்கள் வழங்கப்படும். டோக்கன் பெற்றவர்கள் 9ம் தேதி முதல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். டோக்கன்கள் பெற்ற பக்தர்கள் தினமும் காலை 10 மணிக்கு சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். வெள்ளிக்கிழமைகளில் மட்டும் மாலை 3 மணி நேரம் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்' என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.