88 ஆண்டுகளுக்கு பிறகு மும்பை போலீசார் போக்குவரத்து மற்றும் கூட்ட கட்டுப்பாட்டு பணிகளில் பாரம்பரிய தோரணையில் ஈடுபட உள்ளதாக மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தெரிவித்தார்.

மன்னர் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சி காலம் வரை குதிரைப்படை இருந்தது. ஆனால், அதன்பிறகு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி காரணமாக வாகன போக்குவரத்து பெருக தொடங்கியது. இதனையடுத்து குதிரைப்படை கொஞ்சம் கொஞ்சமாக மறைய தொடங்கியது. தற்போது கடற்கரைகளில் ரோந்து பணி மேற்கொள்வதற்காக குதிரைகளை போலீசார் பயன்படுத்தி வருகின்றனர்.

தற்போது கடற்கரை மணலில் வேகமாக செல்லும் வாகனங்களும் வந்து விட்டது.  இந்நிலையில், மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான அரசு மீண்டும் மன்னர் காலத்துக்கு செல்ல விரும்புகிறது. மும்பையில் போக்குவரத்து மற்றும் கூட்டம் கட்டுபாட்டு பணிகளில் குதிரையில் போலீசார் பணிபுரிவர் என அம்மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தெரிவித்தார். 

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: வளர்ந்து வரும் வாகன போக்குவரத்து காரணமாக 1932ல் போலீசாரின் குதிரை பிரிவு கலைக்கப்பட்டது. மும்பை போலீசாரிடம் தற்போது நவீன ஜீப்புகள், மோட்டார்சைக்கிள்கள் உள்ளன. இருந்தாலும், நெரிசல் மிகுந்த பகுதிகளில் குற்ற ரோந்து பணிகளை மேற்கொள்ள குதிரை போலீஸ் பிரிவு பயனுள்ளதாக இருக்கும். மேலும் மும்பையில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் முதல் முறையாக குதிரை போலீஸ் பிரிவு பங்கேற்க உள்ளது. ஒரு குதிரையில் உள்ள போலீஸ்காரர் தரையில் உள்ள 30 பணியாளர்களுக்கு சமம். பண்டிகைகள், பேரணிகள் மற்றும் பீச்சுகளில் குதிரையில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீஸ்காரரால் நல்ல உயரத்திலிருந்து அந்த பகுதியை கண்காணிக்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.