தமிழகத்தில் இருந்து 400 பேரை கொண்டு வந்து கலவரம் செய்ய அதிமுக சதி திட்டம் தீட்டுவதாக, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறினார்.
புதுவை முதல்வர் நாராயணசாமி, டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி.
சேவை மற்றும் சரக்கு வரி விதிப்புக்கான அனைத்து மாநில நிதியமைச்சர்கள் கூட்டம் டெல்லியில் நடந்தது. அதில் ஒருமித்த கருத்து யாரும் கூறவில்லை. இதனால், வரும் 20ம் தேதிக்கு கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
தேர்தல் விதிமுறைகளை நாங்கள் முறையாக கடைபிடிக்கிறோம். புதுச்சேரியில் அதிமுகவுக்கு ஆதரவு இல்லை. இதனால், விழுப்புரம், கடலூர், திண்டிவனம், சிதம்பரம் ஆகிய பகுதிகளில் இருந்து ஆட்களை அழைத்து வந்து தங்க வைத்து பிரசாரம் செய்கிறார்கள். என்னை தோர்க்கடிக்கவும், தேர்தலை தடுத்து நிறுத்தவும் அதிமுகவினர் சதி செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.
குண்டர்களை வைத்து புதுச்சேரியில் தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதனால், பொதுமக்கள் மத்தியில் பீதி எழுந்துள்ளது. வெளியூரில் இருந்து ஆட்களை கொண்டு வந்து தேர்தலை நடத்தினால், சட்டம் – ஒழுங்கு கெட்டுவிடும். நெல்லித்தோப்பு தொகுதியில் சம்பந்தம் இல்லாதவர்கள், லாட்ஜுகளில் தங்கியுள்ளனர்.
இந்த தொகுதியில் 32 வாக்காளர்கள் தான் உள்ளனர். ஆனால், 4 ஆயிரம் பேரை இறக்கி வைத்து கலவரம் செய்ய அதிமுகவினர் முயற்சிக்கின்றனர். இதுபற்றி மாநில தலைமை தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் – திமுக கூட்டணி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
