கிராமப் புறங்களில் வசிக்கும் மக்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டமான 100 நாள் வேலைவாய்ப் திட்டத்தில் பதிவு செய்து இருந்தால், அவர்கள் ஏப்ரல் மாதத்துக்குள் ஆதார் எண்ணை கண்டிப்பாக இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பதிவு செய்து  இருக்கும் மக்கள் ஆதார்கார்டு வைத்திருப்பதற்கு அடையாளமாக அதன் நகலை, மார்ச் 31-ந்தேதிக்குள் அளிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சரவை செயலாளர் அலுவலகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அதேசமயம், குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை,கிசான் பாஸ்புத்தகம், ஊரகவேலை வாய்ப்பு திட்டத்தில் வழங்கப்பட்ட தாசில்தார், அல்லது அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி கையொப்பம் இட்ட அட்டை வைத்து இருப்பவர்களும் பதிவு செய்து  இந்த திட்டத்தில் பயன் பெறலாம்.

மேலும், ஆதார் அட்டைக்கு விண்ணப்பம் செய்து இருப்பவர்கள் அட்டை பெறாவிட்டால், அவர்கள் பதிவு செய்த விண்ணப்படிவத்தின் நகலையும் அளித்து அதிகாரியிடம் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளலாம்.

இது குறித்து மத்திய அமைச்சரவை செயலாளர் அலுவலகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உள்பட அனைத்து மாநிலங்களும் ஆதார் அட்டை கண்டிப்பாக்கப்படும். ஆதார் அட்டை விரைவாக மக்களுக்கு கிடைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் இணைந்திருப்பவர்களுக்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்படும் போது, பணம் வீண் ஆவது தடுக்கப்படும். பணம் உரியவர்களுக்கு வங்கிக்கணக்கில் சேர்க்கப்படும்'' எனத் தெரிவித்தார்.