இயக்குநர் ஒருவர், தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பிரபல நடிகை பரபரப்பு புகார் கூறியுள்ளார். 

மலையாள தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் நிஷா சாரங். இவர் போத்தன் வாவா, மைபாஸ் உட்பட சில படங்களிலும் நடித்துள்ளா. ஃபிளவர்ஸ்
தொலைக்காட்சியில், உப்பும் மிளகாயும் என்ற காமெடி தொடரில் நீலிமா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த தொடரை இயக்கும் உன்னிகிருஷ்ணன் மீதுதான் நிஷா சாரங் பாலியல் தொந்தரவு பற்றி புகார் கூறியுள்ளார்.

இது குறித்து நடிகை நிஷா கூறுகையில்: இயக்குநர் உன்னி கிருஷ்ணன் படப்பிடிப்பு தளங்களில் அடிக்கடி பாலியல் தொல்லை தந்து வந்தார். பலமுறை
படுக்கைக்கு அழைத்தார். அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தேன். இருப்பினும் படப்பிடிப்பின்போது சில்மிஷங்களில் ஈடுபட்டு வந்தார். இதைக் கண்டித்ததால்
பலமுறை மரியாதை குறைவாக நடத்தினார். 

இது குறித்து அந்த தொலைக்காட்சியின் தலைமை நிர்வாகியிடம் புகார் செய்தேன். அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அந்த தொடரில் இருந்து விலகி விட்டேன். அந்த இயக்குநரை நீக்காவிட்டால் தொடரில் மீண்டும் நடிக்கப் போவதில்லை என்று சேனல் நிர்வாகத்திடம் தெரிவித்து விட்டேன் என்று நிஷா கூறியுள்ளார்.

நடிகை நிஷா சாரங்கிற்கு, நடிகர் மம்மூட்டி மற்றும் மலையாள பெண் சினிமா கலைஞர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் நடிகை நிஷாவுக்கு தொடர்ந்து வாய்ப்பு தருவதாகவும், இயக்குநரை மாற்றுவது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாகவும் ஃப்ளவர் தொலைக்காட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆசைக்கு இணங்க மறுக்கும் நடிகைகளுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை என்று நடிகை பார்வதி மேனன் அண்மையில் கூறியிருந்தார். இந்த நிலையில், சீரியல் இயக்குநர் உன்னிகிருஷ்ணன் மீது நடிகை நிஷா சாரங் கூறிய புகார், மலையாள சின்னத்திரை மற்றும் திரைத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.