நவீன கார் வாங்கியது தொடர்பாக பிரபல நடிகை அமலாபால் மீது கேரள அரசு வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், புதுச்சேரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சர்ச்சைக்குரிய காரில் வந்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதுச்சேரியில் நவீன ரக கார் ஒன்றை நடிகை அமலாபால் பதிவு செய்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. வரி ஏய்ப்பு செய்வதற்காக, போலி ஆவணங்கள் மூலம், புதுச்சேரியில் நவீன கார் பதிவு செய்யப்பட்டதாக கேரள அரசு குற்றம் சாட்டியுள்ளது. இதனைத் தொடர்ந்து நடிகை அமலாபாலுக்கு எதிராக கேரள அரசு விசாரணையும் நடத்தி வருகிறது.

இந்த நிலையில் புதுச்சேரி, காமராஜ் சாலையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடிகை அமலாபால் நேற்று கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, சர்ச்சைக்கு ஆளான காரில் புதுச்சேரிக்கு நேற்று வந்திருந்தார்.

நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் நடிகை அமலாபால் அந்த காரை நிறுத்தி வைத்திருந்தார். அப்போது நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் பொதுமக்கள் என பலர் அந்த காரை வியப்புடன் பார்த்து சென்றனர். விழாவில் கலந்து கொண்ட நடிகை அமலாபால், தனது கண்களைத் தானம் செய்து கையெழுத்திட்டு கொடுத்துள்ளார்.

இதன் பின்னர், நடிகை அமலாபால் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், உலக அளவில், இந்தியாவில்தான் கண் பார்வையற்றவர்கள் அதிகம் என்ற தகவல் அதிர்ச்சி அளிப்பதாக கூறினார். கண்தான விழிப்புணர்வை மக்களிடம் அதிகம் ஏற்படுத்த வேண்டும் என்றார். புதுச்சேரியில் கார் பதிவு செய்த விவகாரம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால் தற்போது அது குறித்து கருத்து கூற முடியாது என்று நடிகை அமலாபால்
கூறினார்.