கேரளாவில் படுகொலை செய்யப்பட்ட மாணவனின் பெற்றோருக்கு ஆறுதல் கூற சென்ற நடிகர் சுரேஷ்கோபி, சிரித்தபடியே செல்ஃபிக்கு போஸ் கொடுத்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

கேரள மாநிலம், கொச்சியில் உள்ள கல்லூரியில் பயின்று வந்த மாணவன் அபிமண்யூ. இடுக்கி மாவட்டம், வட்டவடா பகுதியைச் சேர்ந்த அபிமன்யூ, இந்திய
மாணவர் சங்க தலைவாக இருந்து வந்தார்.

இந்த நிலையில், கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் சுவர் விளம்பரம் செய்வதில் ஏற்பட்ட தகராறு காரணமாக, மற்றொரு சங்கத்தை
சேர்ந்த மாணவர்கள் அபிமன்யூவை கொலை செய்துள்ளனர்.

இந்த நிலையில் மாணவர் அபிமன்யூ குடும்பத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தத்தெடுத்துள்ளது. அபிமன்யூவின் குடும்பத்துக்கு தேவையான உதவிகளை
அந்த கட்சி செய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நடிகரும், பாஜக எம்.பி.யுமான சுரேஷ்கோபி, மாணவர் அபிமன்யூ வீட்டிற்கு சென்று அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். அப்போது அந்த பகுதி மக்களின் குடிநீர் நீர் பிரச்சனையைத் தீர்க்க அபிமன்யூ பெயரில் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

அபிமன்யூ வீட்டாரிடம் துக்கம் விசாரித்து விட்டு வெளியே வந்த அவரை ஏராளமான ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். அப்போது சுரேஷ்கோபி ரசிகர்களைப்
பார்த்ததும் அவர்களுடன் சிரித்தபடி செல்ஃபி எடுத்துக் கொண்டார்.

நடிகர் சுரேஷ் கோபி, துக்க வீட்டுக்கு சென்று செல்ஃபி எடுத்த போட்டோக்கள், வலைத்தளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. துக்க வீட்டிற்கு சென்று
செல்ஃபி எடுத்ததற்கு பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதேபோல் மார்க்சிஸ் கட்சியினரும் சுரேஷ்கோபிக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.