தன்னைப் பற்றி அவதூறாக கருத்து பதிவிட்ட பாஜக எம்.பி. பிரதாப் சிம்ஹா மீது ஒரு ரூபாய் கேட்டு நடிகர் பிரகாஷ்ராஜ், மானநஷ்ட வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

கர்நாடக மாநிலம், மைசூர் நாடாளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி. பிரதாப் பிம்ஹா, கடந்த ஆண்டு நடிகர் பிரகாஷ் ராஜ் குறித்து டுவிட்டரில் அவதூறாக கருத்தொன்றை பதிவிட்டிருந்தார்.

அந்த பதிவைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த நடிகர் பிரகாஷ் ராஜ், அது குறித்து விளக்கம் கேட்டு எம்.பி. பிரதாப் சிம்ஹாவுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். 

பிரகாஷ் ராஜின் நோட்டீசுக்கு, பிரதாப் சிம்ஹா இதுவரை எந்தவித பதிலும் அனுப்பவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து, நடிகர் பிரகாஷ் ராஜ், பிரதாப் சிம்ஹா மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். நேற்று மைசூர் நீதிமன்றத்தில் பிரகாஷ் ராஜ் தரப்பில் மானநஷ்ட வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில், தன்னைப் பற்றி அவதூறான கருத்தை பதிவிட்ட பிரதாப் சிம்ஹா, உடனடியாக அது பற்றி விளக்கம் அளிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். மேலும், தனக்கு நஷ்டஈடாக ஒரு ரூபாய் மட்டும் வழங்க வேண்டும் என்றும் அதில் குடிறப்பிட்டுள்ளார். நடிகர் பிரகாஷ் ராஜ் மனு, விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.