நடிகை ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் திலீப், சட்டத்திற்கு புறம்பாக நிலங்களை வாங்கியுள்ளதாக புதிய புகார் எழுந்துள்ளது.

நடிகை  பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நடிகர் திலீப் கடந்த 10–ந் தேதி கைது செய்யப்பட்டார். தற்போது அவர் ஆலுவா கிளைச்சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது ஜாமீன் மனுவை அங்கமாலி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், வெவ்வேறு தொழில்களை காட்டி திலீப் வாங்கி குவித்துள்ள 55 நிலங்கள் குறித்த விசாரணையை, கேரள வருவாய்துறை ஆரம்பித்துள்ளது.

கேரளாவில் உள்ள ஒருவர், கேரள நில மறுசீரமைப்புச் சட்டத்தின் படி, அதிகபட்சமாக, 15 ஏக்கர் வரையில் சொந்தமாக நிலம் வைத்திருக்கலாம். ஆனால், இதனை மீறி, தான் நடத்தி வரும் பல்வேறு தொழில் நிறுவனங்களின் பெயர்களில், ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர் ஆகிய 5 மாவட்டங்களில், நடிகர் திலீப் இடங்களை வாங்கி குவித்திருத்திருப்பதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து உரிய விசாரணை நடத்துமாறு, கேரள அரசின் வருவாய்துறை அமைச்சகம் 5 மாவட்ட ஆட்சியர்களையும் கேட்டுக்கொண்டிருக்கிறது.