பிரதமர் மோடியைப் புகழ்ந்த கேரள காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ அப்துல்லா குட்டி தற்போது ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். இந்த இணைப்பு விழாவில் ராஜ்யசபா எம்.பி.யும், ஏசியா நெட் நிறுவனத்தின் உரிமையாளரும் ராஜீவ் சந்திரசேகர் உடனிருந்தார். 

கேரளாவின் கண்ணூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. அப்துல்லா குட்டி (52). இவர் கடந்த 2009-ம் ஆண்டுவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து அதன்பின் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இவர் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்ணூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றவர். தற்போது நடைபெற்ற தேர்தலில் போட்டியிட இவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்நிலையில், அப்துல்லா குட்டி கடந்த மாதம் 28-ம் தேதி தனது முகநூலில் பக்கத்தில் காந்தியவாதி என்ற தலைப்பில் பிரதமர் மோடி தலைமையில் அரசின் திட்டங்கள், செயல்பாடுகள் குறித்து புகழ்ந்து பேசினார். இது கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இதனையடுத்து, இது குறித்து உரிய விளக்கம் கேட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், உரிய விளக்கம் அளிக்காததால், அப்துல்லா குட்டி காங்கிரஸ் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். 

இந்த சூழலில் டெல்லிக்கு சென்ற அப்துல்லா குட்டி, நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா ஆகிய இருவரையும் சந்தித்து பேசினார். அப்போது, அவர்கள் அப்துல்லா குட்டியை பாஜகவில் இணையுமாறு வலியுறுத்தினர். இதைத்தொடர்ந்து அப்துல்லா குட்டிய இன்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.