ரயில் பயண கட்டணத்தில், பல்வேறு சலுகைகளை பெறுவோர், முன்பதிவின்போது, இனி, ஆதார் எண்ணை குறிப்பிடுவது கட்டாயம் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.
இன்றைய சூழலில், அவசரமாக வெளியூர் செல்ல வேண்டுமானால், தட்கல் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யப்படுகிறது. அதிலும், குறிப்பிட்ட நேரத்தில் செய்ய வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.
இதனை பயன்படுத்தி கொண்டு சில டிராவல்ஸ் நிறுவனங்கள், பல்வேறு பெயர், வயது கொண்ட டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வைத்துள்ளனர். அவர்களிடம் அவசரமாக, தனது சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என பயணிகள் கேட்கும்போது, அந்த டிக்கெட்டை கொடுத்து, பல மடங்கு பணத்தை கட்டண தொகையாக பெறுகின்றனர்.
இதுபோன்று, மோசடியாக ரயில் டிக்கெட்டுகளை விற்பனை செய்வோரை, ரயில்வே துறையின் புகாரின்படி, போலீசார் அடிக்கடி கைது செய்து வந்தாலும், புற்றீசல் போல் ஏஜென்ட்டுகள் கிளம்பி வருகின்றனர். இந்த பிரச்சனையே, அந்த துறைக்கு ஒரு தலைவலியாக இருந்தது.
இந்நிலையில்,பல்வேறு அரசின் மானியங்கள், சலுகைகளை போலிகள் பெறுவதை தடுக்கும் வகையில், ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி மூத்த குடிமக்கள், நோயாளிகள், விளையாட்டு வீரர்கள் என, பல்வேறு தரப்பினருக்கு, ரயில் கட்டணத்தில் சலுகை அளிக்கப்படுகிறது.
இது, உரியவர்களுக்கு மட்டும் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், முன்பதிவின்போது, ஆதார் எண்ணை குறிப்பிடுவது கட்டாயமாக்கப்பட உள்ளது. 'இதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டு வருகின்றன; விரைவில், இந்த திட்டம் அமலுக்கு வரும்' என ரயில்வே உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
