ஆதார் அமைப்பில் இருந்து எந்த தகவலும் கசியவில்லை எனவும் வேறு சில துறைகளில் இருந்து கசிந்துள்ளது எனவும் அரசு வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி தெரிவித்துள்ளார்.  

நாட்டில், 5 வயதுக்கு மேற்பட்டோரில், 80 சதவீதம் பேருக்கு ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

இதில், ஒவ்வொருவரின் கண் கருவிழி, உள்ளங்கை மற்றும் கட்டை விரல் ரேகைகளை பதிவு செய்து, அதன் அடிப்படையில், பிரத்யேக அடையாள எண் தரப்பட்டுள்ளது.

அரசின் எந்த ஒரு திட்டத்திற்கும் ஆதார் எண்ணை கட்டாயமாக்க கூடாது என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் ஒரு முடிவுக்கு வரும் வரை ஆதார் எண்ணை கட்டாயமாக்க கூடாது என உத்தரவிட்டது.

இதை எதிர்த்து மத்திய அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசின் வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி ஆதார் எண் அவசியம் என்ற நோக்கில் வாதங்களை முன்வைத்தார்.

மேலும், ஆதாருக்கு கைரேகை உள்ளிட்டவற்றை பதிவு செய்வதில் உரிமை மீறல் இல்லை எனவும், மரபணு பரிசோதனை செய்தால் கூட தவறில்லை எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்றும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆதார் அமைப்பில் இருந்து எந்த தகவலும் கசியவில்லை எனவும் வேறு சில துறைகளில் இருந்து கசிந்துள்ளது எனவும் அரசு வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி தெரிவித்தார்.