விமான நிலையங்களில் நுழைவுச் சீட்டு பெற, ஜனவரி 1-ம் தேதி முதல் ஆதார் கட்டாயம் என்று, மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

உலகின் இரண்டாவது பெரிய மக்கள் தொகை நாடான இந்தியாவில், நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் தனித்தனி அடையாள எண் வழங்குவதன் மூலம் நாடுதழுவிய குடிமக்கள் தரவுத்தளத்தை உருவாக்குவதே ஆதார் அடையாள எண் முறையின் முதல் நோக்கம் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. 

அரசின் மானியங்கள், திட்டப் பலன்கள் ஆகியவற்றைப் பெறுவதற்கு, ஆதார் அட்டை கட்டாயம் கிடையாது என்ற நிலைப்பாட்டை மத்திய அரசு தொடர்ச்சியாக எடுத்து வருகிறது. இருப்பினும், ரயில்வே வாரிய பணியாளர் தேர்வுக்கு விண்ணப்பிப்போர், ஆதார் எண் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவித்தது. 

திருப்பதி திருமலை தேவஸ்தானமும், பாத யாத்திரை வரும் பக்தர்கள் திவ்ய தரிசன டிக்கெட் பெற, ஆதார் கட்டாயம் என அறிவித்தது. இந்நிலையில், விமான நிலையத்தில் நுழைவுச் சீட்டு பெற, ஜனவரி 1-ம் தேதி முதல் ஆதார் கட்டாயம் என்று, மத்திய அரசு அறிவித்துள்ளது.