தெலங்கானாவில் சுரங்கப்பாதை இடிந்து ஏற்பட்ட விபத்தில் 8 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டுள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
தெலங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள அம்ராபாத்தில் சுரங்கப்பாதை ஒன்று இடிந்து விபத்து ஏற்பட்டுள்ளது. அதாவது ஸ்ரீசைலம் நீர்தேக்கத்துக்கு அருகில் உள்ள சுரங்கப் பாதையில் நேற்று தொழிலாளரகள் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அதன் ஒருபகுதி திடீரென இடிந்து விழுந்துள்ளது. 500 அடி ஆழம் கொண்ட இந்த சுரங்கப்பாதையின் உள்ளே சுமார் 200 மீட்டர் தொலைவில் சரிவு ஏற்பட்டது.
சுரங்கப்பாதை இடிந்து விழுந்தபோது 60 தொழிலாளர்கள் உள்ளே இருந்தனர். இதில் 52 பேர் உடனடியாக வெளியேறி தப்பினர், சிலர் காயமடைந்தனர். ஆனால் 8 பேர் வெளியேற முடியாமல் உள்ளேயே சிக்கிக் கொண்டனர்.இது குறித்து தகவல் அறிந்ததும் மாநில போலீசார் மற்றும் மாநில, தேசிய மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். சுரங்கப்பாதையின் உள்ளே சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
SDRF, NDRF மற்றும் பிற மீட்புக் குழுக்கள், சிங்கரேணி நிலக்கரி நிறுவன அதிகாரிகளுடன் சேர்ந்து, இடிந்து விழுந்த பகுதி சுரங்கப்பாதையை ஆய்வு செய்து மீட்பு பணிகளை முடக்கி விட்டுள்ளனர். ஆனால் சுரங்கப்பாதையின் ஒரு பகுதி முழுமையாக இடிந்து விட்டதாலும், உள்ளே முழுவதும் சேறு நிறைந்துள்ளதாலும் உள்ளே சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணியில் சிக்கல் எழுந்துள்ளது. சுரங்கப்பாதையின் உள்ளே செல்ல முடியாமல் மீட்பு படையினர் தவித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
"சுரங்கப்பாதையின் உள்ளே செல்ல வாய்ப்பில்லை. அது முற்றிலும் இடிந்து விழுந்துவிட்டது, முழங்கால் வரை சேறு நீண்டுள்ளது. நாங்கள் மற்றொரு நடவடிக்கை எடுக்க வேண்டியதுள்ளது" என்று மாநில மீட்பு படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மீட்பு பணிகள் நடக்கும் இடத்தில் ETF சிறப்பு பொறியியல் குழுக்கள், ராணுவ மருத்துவப் படையின் கள ஆம்புலன்ஸில் இருந்து ஒரு மருத்துவப் பிரிவு, ஒரு ஆம்புலன்ஸ் ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மாற்று வழியில் சுரங்கப்பாதையின் உள்ளே நுழைவது குறித்து மீட்பு படையினர் திட்டமிட்டு வருகின்றனர். விபத்து நடந்து பல மணி நேரமாகி விட்டதால் சுரங்கப்பாதையின் உள்ளே சிக்கியுள்ள தொழிலாளர்களின் கதி என்ன ஆனது? என்பது தெரியவில்லை. ஆனாலும் தொழிலாளர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்டு விட முடியும் என மீட்பு படையினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
முன்னதாக, இந்த விபத்து குறித்து தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியிடம் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார். அப்போது மீட்பு நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும் என்று பிரதமர் மோடி உறுதியளித்தார். சுரங்கப்பாதை விபத்து நடந்தது குறித்தும், மீட்பு பணிகள் குறித்தும் பிரதமர் மோடியிடம் ரேவந்த் ரெட்டி விளக்கம் அளித்தார்.
