காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதலில் உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் வீர மரணம் அடைந்தார். இறுதி மரியாதையின்போது அவரது மகள் கண்ணீர் விட்டு கதறி அழுதது அனைவரின் நெஞ்சையும் உலுக்குவது போல் இருந்தது.

காஷ்மீரில் அனந்தநாக் மாவட்டத்தில் தீவிரவாதிகளின் தாக்கு தலுக்கு அப்துல் ரஷீத் என்ற உதவி சப்-இன்ஸ்பெக்டர் வீரமரணம் அடைந்தார். அவரது உடலுக்கு போலீஸார் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

அப்போது சிறுமியான அப்துல் ரஷீத்தின் மகள் ஜோரா, தனது தந்தையை இழந்த சோகத்தில் கண்ணீர் விட்டு கதறி அழுதாள்.

கடந்த இரு நாட்களுக்கு முன்பு தனது உறவினர் ஒருவரின் திருமணத்துக்காக ஜோரா கையில் மெகந்தி வைத்து அழகு படுத்தி இருந்தாள். அந்த சிறிய கைகளோடு, தனது தந்தையின் சவப்பெட்டியை தொட்டு அழுததும், அந்த கைகளை இனி யாரிடம் காட்டுவேன் என்று கூறி அழுததும் காண்போரை கண்கலங்கச் செய்தது.

இது பார்ப்பவர்கள் இதயத்தை நொறுங்கச் செய்தது. சிறுமி அழும் படம் சமூக வலைதளங்களில் வெளியாகி பலரது அனுதாபத்தை பெற்றுள்ளது.

இந்த சிறுமிக்கு இப்படிப்பட்ட வேதனையான துயரம் ஏற்பட்டிருக்கக் கூடாது என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

தெற்கு காஷ்மீரின் போலீஸ் டிஐஜி தனது பேஸ்புக் பதிவில் சிறுமிக்கு ஆறுதல் கூறியுள்ளார். அவர் தனது பதிவில், ‘‘ உன் கண்ணீல் இருந்து சிந்தும் ஒவ்வொரு துளி கண்ணீரும், ஏராளமானோரின் இதயங்களை உலுக்குகிறது. உனது தந்தை செய்த தியாகம் என்றென்றும் போலீஸ் துறையில் போற்றப்படும். இது ஏன் நடந்தது என்று புரிந்து கொள்ளும் வயது உனக்கு இல்லை.

எங்களைப் போல போலீஸ் துறையில் பணியாற்றும் உன் தந்தை வீரத்திலும் தியாகத்திலும் முத்திரை பதித்துவிட்டார் ’’ என்று தெரிவித்துள்ளார்.