பணத்தின் அருமையை அறிய, குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவரின் மகன், ஐதராபாத்தில் சாதாரணமாக வாழ்ந்து, நான்கு இடங்களில்  ஒரு மாதம் பணியாற்றியுள்ளார்.

குஜராத் மாநிலம், சூரத் நகரில் ஹரே கிருஷ்ணா வைர ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருபவர் கான்ஷியாம் தோலோக்கியா. இவர் 71 நாடுகளுக்கு வைரங்களை ஏற்றுமதி செய்து வருகிறார், ஏறக்குறைய ரூ.6 ஆயிரம் கோடிக்கு சொத்துக்களுக்கு அதிபதி. இவருக்கு 7 மகன்கள். இதில் 7-வது மகன் ஹிதாரத் தோலோக்கியா.

ஹிதாரத் தோலோக்கியா அமெரிக்காவின் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. பட்டம் பெற்றவர். இந்நிலையில், இந்தியாவுக்கு படிப்பை முடித்து திரும்பிய தனது மகன் ஹிதாரத் தோலோக்கியாவை, ஒரு மாதம் பணம் இல்லாமல், செல்போன் இல்லாமல், முற்றிலும் பழக்கமில்லாத இடத்தில் ஒரு மாதம் வாழ்ந்து காட்ட கான்ஷியாம் பணித்தார்.

இந்த ஒருமாத காலத்தில் எந்த காரணம் கொண்டு தனது பெயரை பயன்படுத்தக்கூடாது என்றும் மகனிடம் தெரிவித்து இருந்தார். இதையடுத்து, அமெரிக்காவில் இருந்து விமானம் மூலம் மும்பை வரும் வரை தோலோக்கியாவிடம் தான் எந்த இடத்தில் ஒரு மாதம் தங்கப்போகிறோம் என்பதை கூறவில்லை.

மும்பையில் இறங்கியவுடன் ஹிதாரத் தோலோக்கியாவிடம் ஐதராபாத்துக்கு செல்ல தந்தை கட்டளையிட்டார். மேலும் அவரிடம் இருந்த செல்போன், ஆடைகள் , பணம் அனைத்தும் எடுத்துக்கொள்ளப்பட்டு, செலவுக்கு மட்டும் ரூ.500  பணமும், சில ஆடைகள் மட்டும் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து, ஜூலை 10-ந்தேதி ஐதராபாத்தில் உள்ள ஷாம்சாபாத் விமானநிலையத்துக்கு வந்து இறங்கினார். ஏறக்குறைய ஒருமாதம் ஐதராபாத், செகந்திராபாத் ஓட்டல், கடைகளில் வேலை செய்த ஹிதாராத் ஒருமாதம் காலம் முடிந்து தற்போது தனது தந்தையை பார்க்க செல்ல உள்ளார்.

இது குறித்து ஹிதாரத் தோலோக்கியா கூறியதாவது-

நான் ஐதராபாத்தில் வந்து இறங்கியபோது, எனக்கு அந்த நகரைபற்றி ஒன்றுமே தெரியாது. அங்குள்ள சாப்பாடு முறை, பழக்கவழக்கம் எல்லாமே அன்னியமாகப்பட்டது. இருந்தாலும், விமானநிலையத்தில் இருந்து வௌியே வந்தபின், நம்பிக்கையுடன் என் தந்தையின் சவாலை எதிர்கொண்டேன்.

நான் இந்த சவாலை ஏற்கும்போது என் தந்தை, எந்த காரணம் கொண்டு தனது பெயரை ஒரு மாதத்துக்கு வௌியே கூறக்கூடாது என்று கூறியிருந்தார். ஒரே வேலையில் ஒரு வாரத்துக்கு மேல் இருக்கவும் கூடாது என்று கூறியிருந்தார்.

என்னிடம் இருக்கும் செல்போனும் பறிக்கப்பட்டதால், என்னால் எனது உறவினர்கள், நண்பர்களைக் கூட தொடர்பு கொள்ள முடியவில்லை. என்னுடைய நோக்கம் அனைத்தும் வேலை தேடுவது, வாழ்வது என்றாகிவிட்டது. முதலில் அங்குள்ள மக்களிடம் ஐதாராபாத் குறித்து அறிந்து கொண்டு, சுற்றுலா குறிப்புகளை எடுத்து படித்து நகரை தெரிந்து கொண்டேன்.

செகந்திராபாத்தில் உள்ள ஒரு மலிவான தங்கும் இடத்தில் நான் தங்கினேன்.  குஜராத்தில் உள்ள ஏழை விவசாயின் மகன், என்று கூறி வேலை தேடினேன். அவர்கள் என்னை நம்பினர்.

சாலை ஓரக் கடையில் சாப்பிட்டேன், நெருக்கடியான இடத்தில் 4 பேர் தங்கி இருக்கும் அறையில் நானும் அறையை பகிர்ந்து கொண்டு தங்கினேன். அரசு பேருந்தில் பயணம் செய்தேன்.

ஒரு நிமிடம் கூட வீணாக்காமல் வேலை தேடியதால், முதலில்  மெக்டொனால்ட் பீட்சா ஓட்டலில் சர்வராக வேலை கிடைத்தது. . அடுத்த வாரம் ஒரு மார்க்கெட்டிங் நிறுவனத்தில் டெலிவரி நபராக பணியாற்றினேன். அதன்பின் 3-வது வாரம் ‘அடிடாஸ் ஷூ’ கடையிலும், 4-வது வாரம் ஜேட் ப்ளூ ஷோரூமிலும் பணியாற்றினேன்.

கடந்த ஒரு மாதத்தில் நான் பணியாற்றிய இடத்தில் என்னை நன்றாக நடத்தினார்கள், எனது குடும்பத்தை பற்றி கேட்டார்கள். ஆனால், ஏதும் கூறவில்லை.

500 ரூபாயுடன் நான் எனது பயணத்தை ஐதராபாத்தில் தொடங்கி, ஒரு மாதம் முடியும் போது, என்னிடம் 5 ஆயிரம் ரூபாய் இருப்பு இருந்தது.

அனுபவத்தைக் காட்டிலும், மிகச்சிறந்த கல்வி எதுவுமில்லை. பொறுமையாக இருந்ததால், நான் ஏராளமான விஷயங்களை அறிந்து கொண்டேன். இந்த அனுபவம் எனது கஷ்டமாக காலத்தல் பயன்பெறும். விரைவில் எனது தந்தையைச் சந்தித்து அவருடன் வைர வியாபாரத்தில் ஈடுபட இருக்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.