ஜார்கண்ட் மாநிலம் மொராபாடி என்ற கிராமத்தில் கடும் குடிப்பழக்கத்துக்கு ஆளான தந்தையிடம் இனி மேல் குடிக்காதீங்கப்பா என தடுத்ததால்  ஆத்திரமடைந்த அவர்  பெற்ற மகளையே கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

குடிப்பழக்கம் என்பது மனிதத் தன்மையையே இழக்கச் செய்துவிடும். தாங்கள் என்ன செய்கிறோம் என்பதையே மறக்கச் செய்யும் குடிப்பழக்கம் குடும்பங்கள் மட்டுமல்லாமல் சமுதாயத்தையும் சீரழித்துவிடும். தனிமனிதன்  ஒருவரது குடிப்பழக்கம் எந்த அளவுக்கு குடும்பத்தை கெடுத்து விடுகிறது என்பதை ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்த சம்பவம் எடுத்தக் காட்டுகிறது.

ஜார்கண்ட் மாநிலம் மொராபடி பகுதியை சேர்ந்தவர் பிரதீப் யாதவ். இவரது 18 வயது மகள் சுஜாதா முண்டா, அருகில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வந்தார்.  பிரதீப்புக்கு பல ஆண்டுகளாக குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது.

இதையடுத்து மகள் சுஜாதா தனது தந்தையிடம் குடிப்பழக்கத்தை விடுமாறுதொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். இதனையெல்லாம் சற்றும் கண்டுகொள்ளாத பிரதீப் தொடர்ந்து குடித்து வந்துள்ளார்.

சம்பவத்தன்று வழக்கம்போல் நன்றாக குடித்துவிட்டு பிரதீப் வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் சுஜாதா, தனது தந்தையிடம் சண்டையிட்டுள்ளார்.  இப்படி குடித்துக் கொண்டே இருந்தால் உங்கள் உடல்நலம் கெட்டுப் போவது மட்டுமல்லாமல் நமது குடும்ப நிலையும் மோசமாகும் என எடுத்துக் கூறி சண்டைபோட்டுள்ளார்.

சுஜாதா அட்வைஸ் பண்ணியதால் கடும் கோபமடைந்த பிரதீப், பெற்ற மகள் என்றும் பாராமல், சுஜாதாவை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பியோடிவிட்டார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சுஜாதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய பிரதீப் யாதவை தேடி வருகின்றனர்.