நாடு முழுவதும் 81 லட்சம் ஆதார் கார்டுகள் முடக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அதேசமயம், ஆதார் கார்டு வைத்து இருப்பவர்கள் தங்களின் கார்டு செயல்பாட்டில் உள்ளதா என்பதை உறுதி செய்து கொண்டு, ஒருவேளை ரத்து செய்யப்பட்டு இருந்தால், புதிதாக ஆவணங்களை அளித்து பதிவு செய்யவும் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம்,  வருமான வரி தாக்கல், வங்கி கணக்கு, ரேஷன் கார்டு உள்ளிட்டவைகளுக்கு ஆதார் எண் இணைப்பு கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தது. சமீபத்தில் இறப்பு சான்றிதழ் பெறவும் ஆதார் எண் கட்டாயம் என அறிவித்தது.

இந்த நிலையில் நாடு முழுவதும் உள்ள 81 லட்சம் ஆதார் எண்கள் முடக்கப்பட்டுள்ளதாக மாநிலங்கள் அளையில் சமீபத்தில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொடர்புதுறை இணைஅமைச்சர் பி.பி.சவுத்ரி தெரிவித்தார்.

  கடந்த 2016-ம் ஆண்டு ஆதார் சட்டத்தில் குறிப்பிட்டுள்ள ஆதார் அட்டை பெறுவது தொடர்பாக விதிமுறைகள் 27 மற்றும் 28-வது பிரிவுகளின் கீழ் ஒருவரே பல ஆதார் கார்டுகள் வைத்திருந்தால், அல்லது போதுமான ஆவணங்கள் அளிக்காவிட்டால் அல்லது அங்க அடையாளங்கள் சரியில்லாமல் இருந்தால் முடக்கப்படும். இந்த காரணங்களால் 81 லட்சம் ஆதார் எண்கள் முடக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

5 வயதுக்குள்ளான குழந்தைகளுக்கு ஆதார் எண் வழங்கப்பட்டு இருந்தாலும், 5 வயது நிரம்பியவுடன் தேவையான ஆவணங்களை அளித்து பதிவு செய்ய வேண்டும். மேலும், ஒவ்வொருவரும் 2 ஆண்டுக்கு ஒரு முறை ஆதார் விவரங்களை அப்டேட் செய்யவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முடக்கப்பட்ட 81 லட்சம் ஆதார் எண்களில் உங்களின் ஆதார் எண்ணும் இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ள வழிமுறைகள் தரப்பட்டுள்ளன.

எப்படி அறிந்து கொள்வது?

1. முதலில் resident.uidai.gov.in/aadhaarverification என்ற இணையதளத்தில், ஊதா நிறத்தில் இருக்கும் ஆதார் எண்ணை சரிபார்க்கும் பொத்தானை க்ளிக் செய்ய வேண்டும்.

2. மற்றொரு பக்கம் உருவாகி, அதில் உங்களின் ஆதார் எண்ணையும், ரகசிய பாதுகாப்பு எண்ணையும் பதிவு செய்து, கிளிக் செய்ய வேண்டும்.

3. அதில் ஆதார் எண் செயல்பாட்டில் இருந்தால் செயல்பாட்டில் இருக்கிறது என்று செய்தி அளிக்கும். அதில் உங்களின் தனிப்பட்ட விவரங்களையும் காண்பிக்கும்.

4. ஒருவேளை ஆதார் எண் முடக்கப்பட்டு இருந்தால், மீண்டும் தேவையான ஆவணங்களை எடுத்துக்கொண்டு ஆதார் மையத்துக்கு சென்று மறுபடியும் பதிவு செய்ய வேண்டும். இதற்கு ரூ.25 கட்டணம் செலுத்த வேண்டும்.