8 year old girl who lived with monkeys

உத்தரப்பிரதேசம், பகாரியாச் வனப்பகுதியில் குரங்குகளுடன் வாழ்ந்து வந்த 8 வயது சிறுமியை வனத்துறையினர் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இந்த சம்பவம் நடந்து ஏறக்குறைய 2 மாதங்களுக்கு பின்பு இப்போதுதான் ஊடகங்களின் பார்வைக்கு வந்துள்ளன.

குரங்குகளோடு வாழ்ந்தார்

பகாரியாச் வனப்பகுதியில், மோதிபூர் சரகம், கட்டாரிகாத்வனச்சரணாலயத்தில் கடந்த 2 மாதங்களுக்கு முன் வனத்துறையினர் ரோந்து சென்றுள்ளனர். அப்போது 8 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவர் குரங்குகள் சகஜமான விளையாடிக் கொண்டு இருந்தார். அவரை குரங்குகள் ஒன்றும் செய்யாமல், தங்களின் கூட்டத்தில் ஒருவர் போல் நடத்தியுள்ளன.

மிரண்டு ஓடினார்

இதைக்கண்டு வனத்துறை உதவி ஆய்வாளர் சுரேஷ் யாதவ், உள்ளிட்ட வனத்துறை ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதன்பின் குரங்குகளை அங்கிருந்து விரட்டிவிட்டு, அந்த சிறுமியை மீட்டனர். முதலில் அதிகாரிகளைக் கண்டு மிரண்டு ஓடிய அந்த சிறுமி, பின்னர் அவர்களிடம் சிக்கியுள்ளார்.

மீட்பு

அந்த சிறுமியை மீட்ட வனத்துறையினர் பகாரியாச் மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். கடந்த 2 மாதங்களாக அந்த சிறுமிக்கு தனி அறையில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஓடி ஒளிகிறார்

இது குறித்து மருத்துவமனை தலைமை மருத்துவர் டி.கே. சிங் கூறுகையில், “ குரங்குகளிடம் இருந்து மீட்கப்பட்ட அந்த சிறுமி இப்போதும் விலங்குகளைப் போல் சாப்பிடுகிறார், நடக்கிறார், மனிதர்கள் கண்டால் ஓடி ஒளிந்து கொள்கிறார். விலங்குகளுடனும், குரங்குகளுடன் வாழ்ந்ததால், அந்த சிறுமி உடலில் காயங்கள் உள்ளன. அவற்றுக்கு மருந்து, மாத்திரைகள் கொடுக்கப்பட்டு வருகின்றன.

பேசத் தெரியவில்லை

அந்த சிறுமிக்கு மனிதர்களைப் போல் நடக்க பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இருந்தும் குரங்குகள் போல் கால்கள், கைகளால் நடக்கவே செய்கிறார். அந்த சிறுமிக்கு எந்த மொழியும் தெரியவில்லை. சில நேரங்களில் நாங்கள் அருகே சென்றால் எங்களை தாக்க வருகிறார். அவர் மெல்லவே குணமடைந்து வருகிறார்’’ என்று தெரிவித்தார்.