சாவு எப்படியெல்லாம் வருது பார்த்தீங்களா? கிளாஸ் ரூமில் 8 வயது சிறுமி மாரடைப்பால் உயிரிழப்பு!
பெங்களூருவில் 8 வயது சிறுமி பள்ளியில் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனாவுக்கு பிறகு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மாரடைப்பால் உயிரிழக்கும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பெங்களூரில் 8 வயது சிறுமி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவை அடுத்துள்ள சாம்ராஜ் நகர் அருகே உள்ள பதனகுப்பே கிராமத்தை சேர்ந்த லிங்கராஜு - ஸ்ருதி தம்பதி. இவரது மகள் தேஜஸ்வினி(8). இவர் செயின்ட் பிரான்சிஸ் தனியார் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்துள்ளார். வழக்கம் போல தேஜஸ்வினி நேற்று பள்ளிக்கு சென்றுள்ளார். வகுப்பில் ஆசிரியை பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது மாணவர்களிடம் வீட்டுப் பாடங்களை காண்பிக்கும்படி ஆசிரியை கூறியதை அடுத்து காண்பிக்க சென்றுள்ளார்.
அப்போது தேஜஸ்வினி திடீரென மயக்கம் அடைந்து கீழே சரிந்து விழுந்துள்ளார். மேலும், சுயநினைவின்றி சிறுநீரும் கழித்துள்ளார். இதை பார்த்து ஆசிரியை மற்றும் சக மாணவர்களும் அதிர்ச்சியில் அலறி கூச்சலிட்டனர்.
இதனையடுத்து பள்ளி ஊழியர்கள் உடனே சிறுமியை தூக்கிக்கொண்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டதாகவும், இறப்பிற்கு காரணம் மாரடைப்பு என்றும் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தேஜஸ்வினி பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து மகளின் உடலை கட்டி அணைத்து பெற்றோர் அழுத சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.