ரூ.8 கோடி செல்லாத நோட்டுகளை ரிசர்வ் வங்கி ஏற்க வேண்டும்…உச்ச நீதிமன்றத்தில் திருப்பதி கோவில் நிர்வாகம் மனு...

மத்திய அரசு தடை செய்த ரூ.500, ரூ.1000 செல்லாத நோட்டுகளாக பக்தர்கள் ரூ. 8.29 கோடிக்கு காணிக்கை செலுத்தியுள்ளனர். அதை ரிசர்வ் வங்கி ஏற்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் திருப்பதி கோவில் தேவஸ்தானம் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் கருப்புபணம், கள்ள நோட்டுகளை ஒழிக்கும் வகையில் ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என பிரதமர் மோடி கடந்த ஆண்டு நவம்பர் 8ந் தேதிஅறிவித்தார். அதைத் தொடர்ந்து டிசம்பர் 30-ந்தேதி வரை தபால்நிலையங்கள், வங்கிகளில் கொடுத்து செல்லாத நோட்டுகளை மாற்ற அரசு மக்களுக்கு அறிவுறுத்தியது.

இந்த ரூபாய் நோட்டு தடை காலத்தில், திருப்பதி வெங்கடேஸ்வரா கோயிலில் உண்டியலில், பக்தர்கள் செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுகளை ரூ. 8.29 கோடிக்குடெபாசிட் செய்துள்ளனர். இந்த செல்லாத ரூபாய்களை ரிசர்வ் வங்கி, ஏற்க வேண்டும் என்று திருப்தி தேவஸ்தானம் நிர்வாகம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், அதை ஏற்க ரிசர்வ் வங்கி மறுத்துவிட்டது.

இதையடுத்து, திருப்பதி வெங்கடேஸ்வரா கோயில் நிர்வாகம் சார்பில் வழக்கறிஞரும், தனிநபராக பத்திரிகையாளர் வி.வி.ராமமூர்த்தியும் தனித்தனியாக உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அதில் கூறியிருப்பதாவது-

2016ம் ஆண்டு டிசம்பர் 30-ந்தேதிக்கு பின், திருப்பதி வெங்கடேஸ்வரா கோவில் உண்டியலில் பக்தர்கள் தங்களின் வேண்டுதலை நிறைவேற்ற பணம் செலுத்தியுள்ளனர். அதை ஏற்க மறுப்பது, வௌிநாடு வாழ் இந்தியர்கள், மற்றும் கூட்டுறவு வங்கிகளின் பணத்தை ஏற்க மறுப்பதும் வேறுபாடானதாகும்.

பக்தரிகளின் பணம் ஏற்காமல் போனால், அவரின் நேர்த்திக்கடன், வேண்டுதல் நிறைவேறாமல் போய்விடும். மேலும், அந்த பணத்தை வேறு சேவைகளுக்கு எதற்கும் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்படும். இதுபோன்ற செல்லாத ரூபாய் நோட்டுகளை அளவுக்கு அதிகமாக கையில் வைத்து இருப்பதும் சட்டப்படி குற்றமாகும். ஆதலால், ரிசர்வ் வங்கி ஏற்க உத்தரவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

மேலும், பத்திரிகையாளர் வி.வி.ராமமூர்த்தி தாக்கல் செய்த மனுவில், “ கோயில் நிர்வாகத்தில் இருந்த செல்லாத ரூபாய்களை ரிசர்வ் வங்கி ஏற்க மறுப்பது அரசியலமைப்புச்சட்டத்து விரோதமானது’’ எனத் தெரிவித்து இருந்தார்.