கோவாவில் அரசு வேலைக்காக தேர்வு எழுதிய 8000 பேரும் தோல்வியடைந்துள்ளனர். இது அம்மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பட்டதாரிகள் மட்டும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். எனினும் 100-க்கு குறைந்தபட்சம் 50 மதிப்பெண்கள் கூட பெற முடியவில்லை. கோவாவில் அரசு கணக்காளர் வேலைக்காக 80 இடங்கள் காலியாக இருந்தன. இதனை நிரப்புவதற்காக கடந்த வருடம் அக்டோபரில் விண்ணப்பம் கோரப்பட்டது. இதற்கான தேர்வு ஜனவரி மாதம் நடைபெற்றது. இதில் 8000 பேர் பங்கேற்றனர். 

இதற்கு 5 மணிநேர தேர்வில் ஆங்கிலம், பொது அறிவு, கணக்கு தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டன. இதற்கு 100 மதிப்பெண்கள். இதில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் பெற வேண்டும். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் அடுத்த சுற்றுக்கு செல்வர். 

இந்நிலையில் இதற்கான முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.  இதில் தேர்வு எழுதிய 8 ஆயிரம் பேரும் தோல்வி அடைந்துள்ளனர் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. தேர்வு எழுதிய 8 ஆயிரம் பேரும் ஒரு தேர்வில் தேர்ச்சியடையவில்லை என்றால் மாநிலத்தின் கல்வி தகுதி அகல பாதளத்திற்கு சென்றுள்ளது என்றார்.