5, 8ம் வகுப்புகளுக்கு விரைவில் அரசு தேர்வு….

5, 8-ம் வகுப்புகளுக்கு  அரசு தேர்வு கொண்டு வருவதற்கான மசோதா விரைவில் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 24 மாநிலங்கள் இதற்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில் விரைவில் நடைமுறைக்கு வர இருக்கிறது.

மாநிலங்கள் அவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது, மத்திய மனித வளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பதில் அளித்து பேசினார். அவர் பேசியதாவது-

5, 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தேர்வு நடத்தும் திட்டத்தை கொண்டு வரும் மசோதாவை அரசு தாக்கல் செய்ய இருக்கிறது. இதற்கு அனைவரும் ஆதரவு தருவீர்கள் என்று நம்புகிறேன்.  இந்த மசோதாவின்படி, தேர்வு  எழுதும் மாணவர் ஒருவர் மார்ச் மாதம் நடக்கும் ஆண்டு தேர்வில் தோல்வி அடைந்தால், ஒரு மாதத்துக்குபின் மே மாதத்தில் நடக்கும் தேர்வில் மீண்டும் எழுதி வெற்றிபெறலாம். ஒருவேளை அந்த முறையும் தோல்வி அடையும் பட்சத்தில் மீண்டும் அதே வகுப்பில் தொடரும் நிலை ஏற்படும்.

இது மத்திய அரசு சார்பில் கொண்டு வரப்படும் சட்டமாகும். இதை மாநில அரசுகள் பின்பற்ற வேண்டும் என்று கட்டாயமில்லை. 24 மாநில அரசுகள் 5 மற்றும் 8 ம்வகுப்புகளுக்கு தேர்வு நடத்த வேண்டும் என்று விரும்புகின்றன, ஆதலால், இது மாநிலங்களின் விருப்பதைத் பொருத்து செயல்படுத்தலாம்.

சமீபகாலமாக கல்வியை பாதியில் கைவிடுதல் என்பது தனியார்  பள்ளியில் படிக்கும் குழந்தைகளைக் காட்டிலும், அரசு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளே படிப்பை பாதியில் நிறுத்துகிறார்கள். அரசுப்பள்ளிகளில் தரம் குறைந்துவருவதால், தனியார் பள்ளியை நோக்கி மக்கள் நகர்ந்து, அங்கு தங்கள் குழந்தைகளை சேர்த்து வருகிறார்கள்.

1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை யாரையும் தேர்வில் தோல்வி அடையவைப்பதில்லை என்பதால் 9 ம் வகுப்பு வரை வந்துவிடுகிறார்கள். பிரச்சினையே 9-ம் வகுப்பில் இருந்துதான் தொடங்குகிறது. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை 4 சதவீதம் சரிந்திருந்தது. அதே சமயம், தனியார்பள்ளிகளில் 8 சதவீதம் அதிகரித்து உள்ளது.

ஆதலால், அரசுப்பள்ளிகளின் தரத்தையும், கல்வியையும் உயர்த்துவது என்பது கட்டாயம், அதற்கான பல்வேறு நடவடிக்கைககளை அரசு எடுத்து வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.