57000 crore savings to the government through direct subsidy scheme

இடைத் தரகர்கள் ஒழிக்கப்பட்டு, பல்வேறு நலத்திட்டங்களுக்காக மக்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக மானியத் தொகையை சேர்த்ததன் மூலம் அரசுக்கு ரூ.57 ஆயிரம் கோடி மிச்சமாகியுள்ளது என்று மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்தெரிவித்துள்ளார்.

அரியானாவில் டிஜிட்டல் அரியானா மாநாடு நேற்று நடந்தது. அதில் மத்திய அமைச்சர் ரவிசங்கர்பிரசாத் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது-

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் போல் ஏராளமான நலத்திட்டங்களின் பயணாளிகள் நேரடி மானியத் திட்டத்தின் இணைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் பயணாளிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக மானியத்தை அரசு செலுத்தி வருகிறது.

இதன் மூலம் இடைத் தரகர்கள் தடுக்கப்பட்டு, அரசுக்கு ரூ.57 ஆயிரம் கோடி மிச்சமாகியுள்ளது. மேலும், ஆதார் எண்ணோடு, ஓட்டுநர் உரிமத்தையும் இணைக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அளித்த தகவலின்படி, கடந்த பிப்ரவரி மாதம் வரை 84 திட்டங்கள் மூலம், 33 கோடி பயணாளிகள் நேரடி மானிய பரிமாற்ற திட்டத்தின் மூலம் பயன்பெற்று வருகிறார்கள் எனத் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.