கடந்த நிதியாண்டில் சந்தேகத்திடமான வகையில் பணப்பரிமாற்றம், கள்ள நோட்டுகள் புழக்கம், நாடுகளுக்கு இடையிலான பணப்பரிமாற்றம் ஆகியவை மூலம் ரூ.560 கோடி கருப்பு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நிதி புலனாய்வு அமைப்பு கடந்த 2015-16ம் ஆண்டு மேற்கொண்ட பல்வேறு சோதனைகள், பறிமுதல்களில் இந்த முடிவுகள் வௌியாகியுள்ளன. இதில் கருப்புபணம் பிடிப்பட்ட அளவு குறிப்பிடத்தகுந்த அளவு கடந்த ஆண்டு அதிகரித்துள்ளது.

அந்த அறிக்கையின் விவரம்-

கடந்த 2014-15ம் ஆண்டில் 80 லட்சம் முதல் 1.60 கோடி வரை சந்தேகத்துக்கு இடமான வகையில் ரொக்கப் பணப்பரிமாற்றம் நடந்தது. ஆனால், இது அதற்கு முந்தைய ஆண்டில் அதாவது 2013-14ம் ஆண்டில், 58 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை மட்டுமே சந்தேகத்திடமான வகையில் பரிமாற்றம் நடந்துள்ளது.

அதேபோல, கடந்த 2015-16ம் ஆண்டில் கள்ள நோட்டுகளின் புழக்கமும் 16 சதவீதம் அதிகரித்துள்ளது, நாடுகளின் எல்லையில் இருந்து பரிமாற்றம் செய்யப்படும் பணப்பரிமாற்றம் மட்டும் 850 சதவீதம் உயர்ந்துள்ளது.

இதில் 2015-16ம் ஆண்டில் மத்திய நேரடி வரிகள் வாரியம் தரப்பில் கணக்கில் வராத பணம் ரூ.154.89 கோடியும், அமலாக்கப்பிரிவு மூலம் ரூ.107.47 கோடியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் வருவாய் புலனாய்வு மூலம் ரூ.300 கோடி பிடிபட்டுள்ளது. இதன் ஒட்டுமொத்த மதிப்பு ரூ.562. கோடியாகும்.  இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.