கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் 50 தமிழக பக்தர்கள் கலந்துகொள்ள இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது.
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் 50 தமிழக பக்தர்கள் கலந்துகொள்ள இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது. இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே அமைந்துள்ள கச்சத்தீவில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் உள்ள அந்தோணியார் இருநாட்டு மீனவர்களுக்கும் கருணை தெய்வமாக விளங்குகிறார். இந்த ஆண்டின் கச்சதீவு அந்தோணியார் ஆலய திருவிழா வருகிற மார்ச் மாதம் 11, 12 ஆம் தேதிகளில் நடைபெறுகின்றது. இந்த திருவிழாவில் இரு நாட்டினரும் கலந்து கொள்வார்கள். இலங்கைக்கு கச்சத்தீவு கொடுக்கப்பட்டாலும் புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் கலந்து கொள்ள தமிழக மீனவர்கள் எந்தவித ஆவணங்களும் கொண்டு செல்ல தேவையில்லை.

ஆனால், கொரோனா பரவலை காரணம் காட்டி தமிழக மீனவர்களுக்கு அனுமதி கிடையாது என்று இலங்கை முன்னதாக கூறியது. கடந்த ஆண்டும் கொரோனா பரவலால் இந்திய பக்தர்கள் திருவிழாவில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படாத நிலையில், 2 ஆவது ஆண்டாக இந்த ஆண்டும் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு அனுமதி கிடையாது என்று அந்நாட்டில் இருந்து வெளியாகி உள்ள தகவல், மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை அடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக பக்தர்களுக்கு அனுமதி அளிக்கக்கோரி கடிதம் எழுதியிருந்தார்.

மேலும் மீனவர்களும் தங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில், கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் 50 தமிழக பக்தர்கள் கலந்துகொள்ள இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது. இலங்கையை சேர்ந்த பக்தர்கள் 50 பேரும் திருவிழாவில் பங்கேற்க அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. பக்தர்கள் இன்றி திருவிழா நடைபெறும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு இலங்கை அரசு தெரிவித்துவந்த நிலையில், தற்போது இரு நாட்டு மக்களுக்கும் அனுமதி அளித்துள்ளது. இதனால் தமிழக மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
