கருப்புப் பணத்தை வெளிக்கொணர்வதற்கான மத்திய அரசின் அடுத்தகட்ட நடவடிக்கையாகயாகவும், ரூபாய் நோட்டு தட்டுப்பாட்டை போக்குவதற்கு உரிய ஆலோசனைகளை வழங்குவதற்காக 5 மாநில முதல்வர்கள் கொண்ட குழு அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8ம் தேதி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். அதன் பிறகு நாடு முழுவதும் பெரும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டு, மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதற்கிடையில் ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடுவும் முடிந்துவிட்டது. ஆனால், பழைய நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்யலாம் என்று அரசு அறிவித்தது.
மக்கள் வங்கி மற்றும் ஏடிஎம் மையங்களில் பணம் எடுப்பதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரிதும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். அந்த அறிவிப்பு வெளியாகி 3 வாரங்கள் ஆகியும் நிலைமை இதுவரை சீரடையவில்லை. வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்கள் முன்பு அதிகாலை முதல் தவமாய் தவமிருக்கும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள்.
இந்த பிரச்சனையை சமாளிக்கவும், மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டுவரவும் மத்திய அரசுக்கு தகுந்த ஆலோசனைகளை வழங்க 5 மாநில முதல்வர்கள் கொண்ட குழுவை அமைக்க மத்திய அரடு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகவும், சந்திரபாபு நாயுடுவே இந்த குழுவுக்கு தலைமை ஏற்குமாறு வற்புறுத்தியாகவும் ஆந்திர முதல்வர் அலுவலக வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருப்புப் பணத்தை ஒழிக்க 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை ஒழிக்க வேண்டும் என சந்திரபாபு நாயுடு வலியுறுத்தி வந்தார். ஆனால், கருப்பு பணம் ஒழிக்கப்படும் எனக் கூறிவிட்டு புதிதாக வெளியிடப்பட்ட 2000 ரூபாய் நோட்டுக்கு எதிர்ப்பை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
