ரூபாய் நோட்டு தடைக்கு பின், வங்கிகளில் ரூ.5 லட்சம் வரை டெபாசிட் செய்த 70 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் கூடுதலாக எந்த விசாரணையும் நடத்தப்படாது. அதேசமயம், தனிநபர்கள் ரூ.2.5 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்து இருந்தால் விசாரணை செய்யப்படும் என வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.
ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டபின், வங்கியில் ரூ. 2லட்சத்துக்கு அதிகமாக செல்லாத நோட்டுகளை டெபாசிட் செய்ய தடை விதிக்கப்பட்டு இருந்தது. ஆனால், ஏராளமானோர் கணக்கில் வராத பணத்தை டெபாசிட் செய்தனர்.
இதையடுத்து, ‘ஆப்ரேஷன் கிளீன் மணி’ என்ற பெயரில் வருமான வரித்துறையினர், ரூ.2.5 லட்சத்துக்கு அதிகமாக ரூபாய் நோட்டுதடை செய்யப்பட்ட 50 நாள் காலத்தில் டெபாசிட் செய்த நபர்கள், நிறுவனங்கள் பட்டியலை எடுத்து ஆய்வு செய்து வருகின்றனர்.
இது தொடர்பாக 18 லட்சம் பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் 4.5 லட்சம் பேர் முறையான பதில் அளிக்க வில்லை.
இந்நிலையில், நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் நேற்று அளித்த பேட்டியில் கூறுகையில், “ 2016, நவம்பர் 8-ந்தேதி முதல் டிசம்பர் 30-ந்தேதி முதல் வங்கியில் செல்லாத ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்தவர்கள் ஒவ்வொருவரையும் ஆய்வு செய்யவில்லை.
இது குறித்து யாரும் அச்சம் கொள்ள வேண்டாம். நாங்கள் ஒரு அளவு, கணக்கீடு வைத்து குறிப்பிட்ட நபர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம்.
ஆன்-லைன் மூலம் நடத்தப்பட உள்ள இந்த விசாரணையில் 70 வயதுக்கு உட்பட்டவர்கள், ரூ. 2.5 லட்சம் மேல் டெபாசிட் செய்தவர்கள், வருமானவரித்துறையினரின் இணையதளத்துக்கு சென்று, தங்களின் வருமான விவரத்தை தெரிவிக்கலாம்.
அதில் டெபாசிட் பணம், முந்தைய வருமான வரி ரிட்டனுடன் சரியாகப் பொருந்தினால், விசாரணை முடிக்கப்படும். அவ்வாறு சரியாக பொருந்தாவிட்டால், வருவாய்க்கும், டெபாசிட்டுக்கும் தொடர்பில்லாமல் இருந்து, சந்தேகத்துக்கு உரிய வகையில் இருந்தால், அடுத்த கட்ட விசாரணை தொடரும்.
அதேசமயம், 70 வயதுக்கு மேற்பட்டவர்கள், ரூ. 5 லட்சம் வரை டெபாசிட் செய்து இருந்தால், அந்த டெபாசிட் பணம் முந்தைய சேமிப்பாகவோ, ஓய்வூதிய பணமாகவோ, அல்லது வர்த்தகம் மூலம் ஈட்பட்டப்பட்ட வருமானமாக இல்லாவிட்டால் விசாரணை செய்யப்படாது'' எனத் தெரிவித்தார்.
