ஊரடங்கு உத்தரவால் தன் 5 குழந்தைகளுக்கு உணவு கொடுக்க முடியாமல் திண்டாடிய தாய், அந்தக் குழந்தைகளை கங்கை ஆற்றில் தள்ளிய அதிர்ச்சி சம்பவம் நடந்தேறியுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டது. தற்போதைய நிலையில் இந்தியாவில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிப்பு இன்னும் குறையாத காரணத்தால், மேலும் 15 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட உள்ளது. அதேவேளையில் ஊரடங்கு உத்தரவால், வாழ்வாதாரங்களை ஏழை, எளிய மக்கள் இழந்துள்ளனர். பல மாநிலங்களில் உணவுப் பொருட்களை வாங்குவதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.


இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில் உணவு கிடைக்காமல் பசியால் வாடிய 5 குழந்தைகளை தாய் கங்கை ஆற்றில் தள்ளிய பயங்கர சம்பவம் நடந்துள்ளது. பாதொஹி என்ற மாவட்டத்தில் ஜஹாங்கிர்பாத் பகுதியில் வசிக்கும் ஏழைப் பெண் ஒருவர், தினக்கூலி வேலையைச் செய்துவந்துள்ளார். ஊரடங்கு உத்தரவுக்குப் பிறகு கையில் காசில்லாமல் அல்லாடிய அவர், தனது 5 குழந்தைகளுக்கு உணவு கொடுக்க முடியாமல் திண்டாடியிருக்கிறார். குழந்தைகளுக்கு உணவு கொடுக்க முடியவில்லையே என்ற வேதனையில் இருந்த அந்தத் தாய், விரக்தியில் 5 குழந்தைகளையும் கங்கை நதியில் தள்ளி மூழ்கடித்ததாக தகவல்கள் வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தகவல் அறிந்த அப்பகுதி தீயணைப்புத் துறையினரும் போலீஸாரும்  கங்கை ஆற்றில் குழந்தைகளை தேடும் முயற்சியில் இறங்கியுள்ளனர். மேலும் அந்தத் தாயை கைது செய்து போலீஸார் விசாரித்துவருகிறார்கள். இந்த சம்பவம் வெளியாகி தற்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.