ஹரியானாவின் ராக்கிஹர்கி என்ற இடத்தில் தொல்லியல் துறையினர் நடத்திய அகழாய்வில் 4,500 ஆண்டுகளுக்கு முந்தைய திராவிடர் நகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த அகழாய்வில் எடுக்கப்பட்ட எலும்புக் கூடு ஒன்றின் மரபணுக்கள் தமிழகத்தின் இருளர் இன மக்களுடன் பொருந்தும் வகையில் இருக்கிறது என்பது தொல்லியல் துறை வல்லுநர்களின் கருத்து. 

உலகின் ஆதி குடிகள் தமிழர்கள் என்பது பொது கருத்து. ஆப்பிரிக்காவின் நைரோபி உள்ளிட்ட இடங்களில் இன்றளவும் தமிழில் ஊர் பெயர்கள் இருக்கின்றன. சிந்துசமவெளி பகுதிகளான பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் தமிழில் ஊர் பெயர்கள் இருப்பதை ஆதாரங்களுடன் ஆய்வாளர் ஆர். பாலகிருஷ்ணன் நிரூபித்தும் இருக்கிறார். ஈராக்கின் யாசிதி இன மக்கள் தமிழர்களைப் போல வேல், மயில், தீபம் என வழிபாட்டு முறையை கொண்டிருக்கின்றனர். குஜராத்தின் தோலவீரா போன்ற சிந்துசமவெளி மக்களின் நகரங்கள் அவ்வப்போது கண்டறியப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் ஹரியானாவின் ராக்கிஹர்கி என்ற இடத்தில் தொல்லியல் துறை வல்லுநர்கள் பழங்கால நகரம் ஒன்று குறித்து விரிவான ஆய்வு நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளனர். குறிப்பாக ராக்கிஹர்கி நகரில் எழும்புக் கூடு ஒன்று கண்டெடுக்கப்பட்டு மரபணு சோதனை நடத்தப்பட்டது. இம்முடிவில் எலும்புக் கூட்டின் மரபணுவானது தமிழகத்தின் பழங்குடிகளான இருளர்களுடன் பொருந்தும் வகையில் உள்ளது என கண்டறிந்துள்ளனர்.

 

அத்துடன் சிந்து சமவெளி நாகரிகத்துக்கும் முந்தைய அதாவது சுமார் 4,500 ஆண்டுகள் பழமைவாய்ந்த நகரம் இது என்பதையும் இங்கே வாழ்ந்த மக்கள் பேசியது ஆதி திராவிட மொழி என்பதையும் உறுதி செய்துள்ளனர் வல்லுநர்கள். இதன் மூலம் இந்திய நிலப்பரப்பு முழுவதும் தமிழர்கள் வாழ்ந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிந்து சமவெளி நாகரிக அழிவைத் தொடர்ந்தே ஆரியர் இந்திய நிலப்பரப்புக்குள் குடியேறிகளாக நுழைந்துள்ளனர் என்பதை ராக்கிஹர்கி ஆய்வு நிரூபித்திருக்கிறது.