ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் அவந்திபுராவில் உள்ள கோரிபொரா பகுதியில் 70 வாகனங்களில்  அதிகாரிகள் உள்பட மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் 2,500 பேர் சென்று கொண்டு இருந்தனர். 

அப்போது பாதுகாப்பு படை வீரர்கள் சென்ற 2 பஸ்கள் மீது ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பினை சேர்ந்த தற்கொலை படை தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை ஏற்றி சென்ற வாகனத்தைக் கொண்டு மோதி தாக்குதல் நடத்தினர்.

இதில்  8 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியானது.  பல வீரர்கள் படுகாயம் அடைந்து அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி  ஏராளமோனோர்  பலியானார்கள். 

இதையடுத்து  தீவிரவாதிகள் தாக்குதலில் பலியான சி.ஆர்.பி.எப். வீரர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்தது.

இந்த சம்பவத்திற்கு ஜம்மு மற்றும் காஷ்மீர் முன்னாள் முதல் அமைச்சர்கள்  உமர் அப்துல்லா மற்றும் மெஹ்பூபா முப்தி கண்டனம் தெரிவித்து உள்ளனர்.  இதேபோன்று தீவிரவாத தாக்குதலுக்கு  குடியரசுத் தலைவர் ராமநாத் கோவிந்த் , பிரதமர் மோடி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநரின் ஆலோசகர் கே.விஜயகுமார் , ஜம்மு-காஷ்மீர் புல்வாமா தாக்குதலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் மூலம் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ விசாரணை நடத்தி வருகிறது. பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பாதுகாப்பு குறைபாடு ஏதும் இல்லை என்று அவர் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,.புல்வாமா பயங்கரவாத தாக்குதல் சம்பவம் துரதிருஷ்டவசமானது.. பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த 42 சி.ஆர்.பி.எப் வீரர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இதுபோன்ற தாக்குதல் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். 

இந்த தாககுதல் குறித்து விவாதிப்பதற்காக  டெல்லியில் பாதுகாப்புத் துறைக்கான மத்திய அமைச்சரவைக் குழு நாளை காலை 9.15-க்கு கூட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.