உலகத்தை புரட்டிப்போட்டிருக்கும் கொடிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு 12 ஆயிரத்தை கடந்துள்ளது. இதுவரை இந்தியாவில் கொரோனா பாதிப்பு இருப்பதாக 12,380 பேர் கண்டறியப்பட்டு தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிகிச்சை பலனின்றி 414 பேர் உயிரிழந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தற்போது அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. நேற்று பலியானவர்களின் எண்ணிக்கை 392 ஆக இருந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 22 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தவர்களில் 1,489 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஸ்டிராவில் 2,916 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 187 பேர் மரணமடைந்திருக்கும் நிலையில் 295 பேர் குணமடந்து வீடு திரும்பியுள்ளனர். அதற்கடுத்தபடியாக டெல்லியில் 1,578 பேரும் தமிழகத்தில் 1,242 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். பிற மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு கணிசமாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் கொரோனா பரவுதலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் அமலில் இருந்த 21 நாட்கள் ஊரடங்கு இரண்டாம் கட்டமாக மேலும் 19 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. மே 3ம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் அதில் சில தளர்வுகளையும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, ஏப்ரல் 20ம் தேதி வரை ஊரடங்கு கடுமையாக பின்பற்றப்படும் என்றும் அதன்பின் கொரோனா பாதிப்பு குறைவாக இருக்கும் இடங்களில் கொரோனா தொற்றுக்கு இடமளிக்காத வகையில் பணிகளை மேற்கொள்ள அரசு அறிவுறுத்தி இருக்கிறது. எனினும் மக்கள் கட்டாயம் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் எனவும் ஊரடங்கு தளர்த்தப்பட்டிருக்கும் பகுதிகளில் பாதிப்பு ஏற்படுவதாக தெரியும் பட்சத்தில் மீண்டும் தடை உத்தரவு உடனடியாக அமலுக்கு வரும் என்றும் அரசு எச்சரித்துள்ளது.மேலும் நாடு முழுவதும் மத வழிபாட்டுத்தலங்களில் மக்களுக்கு அனுமதி கிடையாது என கூறியிருக்கும் மத்திய அரசு பொதுமக்கள் கூடும் விதமாக எந்தவொரு விழாக்களுக்கும் அனுமதி இல்லை எனவும் தெரிவித்துள்ளது.