உத்தரப் பிரதேச மாநிலம் பாலியாவில் படகு கவிழ்ந்த விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர்.
பாலியாவில் படகில் 40 பேர் பயணம் செய்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் நான்கு பேர் உயிரிழந்து இருப்பது தெரிய வந்துள்ளது.
உத்தரபிரதேசத்தில் உள்ள பாலியா மாவட்டத்தின் மால்தேபூர் பகுதிக்கு அருகே கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்ததில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்து இருப்பது தெரியவந்துள்ளது. மேலும், 24 பேர் காணாமல் போயிருப்பதாக கூறப்படுகிறது.
முதல் கட்ட தகவலின் அடிப்படையில், படகில் சுமார் 40 முதல் 50 பேர் பயணித்து இருப்பதாகத் தெரிகிறது. நான்கு பெண்களின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. உள்ளூர் படகு வீரர்கள் உதவியுடன் அப்பகுதியில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு பாலியாவில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
முன்னதாக, பாலியா மாவட்டக் கலெக்டர் ரவீந்திர குமார் கூறுகையில், ''இதுவரை 4 பேர் உயிரிழந்து இருக்கின்றனர். மேலும் 3 பேர் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மீட்பு பணி இன்னும் நடந்து வருகிறது'' என்றார்.
சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் படகு கவிழ்ந்ததாக தெரிவித்துள்ளனர். மக்கள் உள்ளூர் கண்காட்சிக்கு சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்ததாக உள்ளூர் வட்டாரங்கள் தெரிவித்தன.
