வெளிநாடுகளில் இருந்து தங்கம் மற்றும் போதை பொருட்கள் அதிகளவில் விமானம் மூலம் கடத்தப்பட்டு வருகிறது. இதனை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து பறிமுதல் செய்கின்றனர். அதேபோல் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு போலீசாரும், ரகசியமாக கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதனால்,கடத்தல் கும்பல் பல்வேறு நூதன முறையில் போதை பொருட்கள், தங்கத்தை கடத்தி வருகின்றனர். இதற்காக தற்போது, சரக்கு கப்பல்களில், மருந்து உள்ளட்ட பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் என்ற பெயரில் போதை பொருட்களை கடத்தி வருவதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தொடர்ந்து ரகசிய தகவல்கள் வந்து கொண்டே இருக்கின்றன.

இந்நிலையில், குஜராத் கடற்கரையில் ஒரு சரக்கு கப்பலில் இருந்து,ரூ.3,500 கோடி மதிப்புள்ள, 1,500 கிலோ,'ஹெராயின்' போதை பொருளை இந்திய கடலோர காவல் படை பறிமுதல் செய்துள்ளது.

இதுதொடர்பாக ராணுவத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி அபிஷேக்ஷக் மதிமான் கூறியதாவது:-

குஜராத் கடற்கரை பகுதியில், உளவுத்துறை கொடுத்த ரகசிய தகவலின் பேரில், இந்திய கடலோர காவல் படையை சேர்ந்த, ' சமுத்ரா பவாக்' கப்பல், நேற்று மதியம் 12 மணிக்கு சரக்கு கப்பலை வழிமறித்து சோதனையிட்டது.

இந்த சோதனையின்போது, சரக்கு கப்பலில் ரூ.3,500 கோடி மதிப்புள்ள, 1,500 கிலோ, 'ஹெராயின்' போதை பொருள் இருப்பதை கண்டுபிடிக்கப்பட்டது. அதை தொடர்ந்து கப்பலில் இருந்த போதை பொருட்களை பறிமுதல் செய்துள்ளோம்.

இதுகுறித்து இந்திய கடலோர படை, மத்திய உளவுத்துறை, காவல்துறை, சுங்க துறை, கடற்படை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர் என்றார்.