கொரோனாவின் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகமாகிவருகிறது. சீனா, இத்தாலி, ஸ்பெய்ன் ஆகிய நாடுகளில் கொரோனா ருத்ரதாண்டவம் ஆடிவருகிறது. உலகம் முழுதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கிவிட்டது. இதுவரை 12,755 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். 

ஸ்பெய்னில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 324 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு கொரோனாவிற்கு பலியானோரின் எண்ணிக்கை 1375ஆக உயர்ந்துள்ளது. கொரோனா உருவான சீனாவை விட இத்தாலி பேரிழப்பை சந்தித்துவருகிறது. இத்தாலியில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்து சென்றுகொண்டிருக்கிறது. 

இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கம் வீரியமடைந்துவருகிறது. ஆனால் இந்தியாவில் சமூகத்தில் கொரோனா பரவலை தடுக்க, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டுவருகின்றன. சமூக பரவலை தடுத்துவிட்டால், கொரோனாவை தடுத்துவிடலாம்.

எனவே மக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள தனிமைப்படுத்தி கொள்ளுமாறு மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தியுள்ளன. இன்று ஒரு நாள் சுய ஊரடங்கை கடைபிடிக்குமாறு பிரதமர் மோடி வலியுறுத்தியிருந்தார். எனவே பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று நாடு முழுவதும் சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டுவருகிறது. 

இந்த சுய ஊரடங்கின் காரணமாக கொரோனா வைரஸின் பரவல் முற்றிலுமாக கட்டுப்படுத்தப்படும் என்று யாரும் கூறவில்லை என்றும், ஆனால் இந்த சுய ஊரடங்கின் மூலம் மக்கள் ஒருவரையொருவர் சந்திப்பது குறைந்தால், பெரும்பாலான பரப்புகளில் சில மணிநேரங்களுக்கு மட்டுமே வீரியத்துடன் இருக்கும் கொரோனா வைரஸின் பரவல் ஓரளவுக்கு கட்டுக்குள் வரும்.

எனவே இதை மக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. நேற்று இரவு நிலவரப்படி, 298ஆக இருந்த பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இன்று காலை நிலவரப்படி 315ஐ எட்டிவிட்டது. மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், கேரளா, ஹரியானா ஆகிய மாநிலங்களில் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். எனவே அரசாங்கத்தின் அறிவுரைகளை ஏற்று மக்கள் சுய ஊரடங்கையும் தனிமைப்படுத்தலையும் கடைபிடிக்க வேண்டும். அப்போதுதான் கொரோனாவை தடுத்து விரட்டமுடியும்.