உத்தரப்பிரதேசத்தில் மருத்துவமனை ஒன்றில் 30 குழந்தைகள் கடந்த 48 நேரத்தில் உயிரிழந்துள்ளனர். அவர்கள் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மூச்சுத் திணறி உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் பி.எம்.டி. அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகளுக்கு மருத்துவர்கள் செயற்கை ஆக்ஸினை பயன்படுத்துவார்கள்.

அந்த வகையில் பி.எம்.டி. அரசு மருத்துவமனைக்கு தனியார் நிறுவனம் ஒன்று ஆக்ஸிஜன் சிலிண்டர்களை சப்ளை செய்து வந்தது. அதற்கு ரூ. 60 லட்சம் வரை மருத்துவமனை நிர்வாகம் பாக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் ஆக்ஸிஜன் சிலிண்டர் விநியோகத்தை அந்த நிறுவனம் நிறுத்திக்கொண்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் அதிர்ச்சி அளிக்கும் விதமாக நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று வரைக்கும் சுமார் 30 குழந்தைகள் உயிரிழந்துள்ளன.

இதற்கு ஆக்ஸிஜன் சிலிண்டர் பற்றாக்குறையே காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கோரக்பூர் மக்களவை தொகுதியின் உறுப்பினராக முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்ததை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ராஜீவ் ரவுதலா விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

இருப்பினும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாகத்தான் மூச்சுத் திணறி குழந்தைகள் உயிரிழந்தனர் என்கிற குற்றச்சாட்டை அவர் மறுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், நான் மருத்துவர்களிடம் விசாரணை மேற்கொண்டேன். இதில் குழந்தைகள் உயிரிழப்புக்கு மூச்சுத்திணறல் காரணம் அல்ல என்பது தெரியவந்துள்ளதாக கூறினார். இதேபோல் இந்த குற்றச்சாட்டை மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சித்தார்த் சிங்கும் மறுத்துள்ளார்.

48 மணி நேரத்தில் 30 குழந்தைகள் உயிரிழந்திருப்பது உத்தரப்பிரதேசத்தில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.