ஜம்மு-காஷ்மிரில் பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற கடும் துப்பாக்கிச் சண்டையில், 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம், எல்லையில் உள்ள இந்திய நிலைகள் மீது அத்துமீறி அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இந்திய ராணுவத்தின் கவனத்தை திசைதிருப்பி அதன் மூலம் தீவிரவாதிகளை இந்தியாவுக்குள் ஊடுருவச் செய்யும் முயற்சியாக பாகிஸ்தான் ராணுவம் இதுபோன்ற தாக்குதலை நடத்தி வருகிறது. உரி தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடத்திய துல்லிய தாக்குதலில் பல தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டு, தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்துள்ள பாகிஸ்தான் தொடர்ந்து இந்திய நிலைகளை தாக்கி வருகிறது.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலம் Bandipora மாவட்டத்தில், தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே இன்று கடுமையான துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது. இதில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அந்த பகுதியில் பதற்றம் அதிகரித்து காணப்படுகிறது.
இதனிடையே, ஜம்மு காஷ்மீரில் தொடர்ந்து நீடித்து வரும் அமைதியின்மை காரணமாக, அங்குள்ள மாணவர்கள் வெளியிடங்களில் சென்று கல்வி கற்க விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.
வர்த்தகர்கள் மற்றும் வாகன உரிமையாளர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, 2 நாட்களுக்கு முழு அடைப்பு போராட்டத்தை நிறுத்தி வைத்த பிரிவினைவாதிகள், மீண்டும் தங்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளதால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
