மீண்டும் பற்றி எரியும் மணிப்பூர்! 3 பேர் சுட்டுக்கொலை... பழி தீர்க்க வீடுகளுக்குத் தீ வைப்பு!
இறந்த மூவரில் இருவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, மகன் எனவும் மற்றொருவர் அவர்களின் பக்கத்து வீட்டில் வசித்தவர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்ததில் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதனால், அந்த மாநிலத்தில் 8 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது
மணிப்பூரில் வெள்ளிக்கிழமை இரவு மீண்டும் இருதரப்பினர் இடையே கலவரம் ஏற்பட்டது. இதில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். பலியான மூவரும் மெய்தீ சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இறந்த மூவரில் இருவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, மகன் எனவும் மற்றொருவர் அவர்களின் பக்கத்து வீட்டில் வசித்தவர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு பழி தீர்க்கும் விதமாக குக்கி சமூகத்தினர் வசிக்கும் பகுதிகளில் வீடுகளுக்குத் தீ வைக்கப்பட்டிருக்கிறது. குவாக்டா பகுதியில் இந்தக் கலவரம் மூண்டிருக்கிறது. இந்த வன்முறையால் அங்கு தளர்த்தப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு உள்பட இன்னும் பல பகுதிகளிலும் ஊரடங்கு தளர்வு திரும்பப் பெறப்பட்டது.
"மத்தியப் படைகளின் பாதுகாப்பு வளையத்தில் இருந்த பகுதியில் இருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள குவாக்டா பகுதியில் வன்முறையாளர் ஊடுருவியுள்ளனர். அவர்களில் சிலர் மெய்தீ மக்கள் இருக்கும் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் அப்பகுதியில் சண்டை மூண்டது. இதில் மெய்தீ மக்கள் மூவர் கொல்லப்பட்டனர். குக்கி சமூகத்தினரின் வீடுகள் பல தீக்கறையாக்கப்பட்டன" என்று கூறும் பிஷ்ணுபூர் போலீசார் அப்பகுதியில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சொல்கிறார்.
இரண்டு நாட்களுக்கு முன் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் ஆயுதப் படைகளுக்கும் மெய்தீ சமூகத்தினருக்கும் இடையே நடந்த மோதலில் 17 பேர் காயம் அடைந்தனர். அதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை நடந்த கலவரத்தில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
மே 3ஆம் தேதி முதல் நடைபெற்றுவரும் வன்முறைச் சம்பவங்களில் சுமார் 200 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், அங்கு மறுபடியும் கலவரம் மூண்டிருப்பது மணிப்பூர் மக்களை கலக்கம் அடைய வைத்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 8 மாவட்டங்களில் ஊரடங்கு நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.