இந்தியாவில் 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 24,850 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. தினமும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டிவருகிறது. சனிக்கிழமை காலை 8 மணியிலிருந்து ஞாயிறு(இன்று) காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் இந்தியாவில் 24,850 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. எனவே இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,73,165ஆக அதிகரித்துள்ளது. 24 மணி நேரத்தில் 613 பேர் இந்தியாவில் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். எனவே உயிரிழப்பு எண்ணிக்கை 19,268ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சுமார் 4 லட்சத்து 10 ஆயிரம் பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

இந்தியாவை பொறுத்தமட்டில் மகாராஷ்டிரா தான் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்துவிட்டது. தமிழ்நாட்டில், 1,07,001 பேரும் டெல்லியில் 97,200 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

உலகளவில் கொரோனா பாதிப்பில் மூன்றாம் இடத்தில் உள்ள ரஷ்யாவை விட வெறும் 10 ஆயிரம் என்ற அளவில் தான் இந்தியா பின் தங்கியிருக்கிறது. எனவே நாளை அல்லது நாளை மறுநாள், ரஷ்யாவை பின்னுக்குத்தள்ளி உலகளவில் மூன்றாம் இடத்தை பிடித்துவிடும் இந்தியா. கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும் பிரேசில் இரண்டாம் இடத்திலும் உள்ளன.