அரசு பணியில் இருந்து கொண்டு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டது, சரியாக பணியைச் செய்யாமல் மந்த இருப்பது போன்ற செயல்பாடுகளைக் கண்டறிந்து இதுவரை 24 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், 357 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடியிடம், மத்திய பணியாளர் துறை அமைச்சகம் அறிக்கை அளித்துள்ளது. 

இதன்படி இந்த அதிகாரிகளுக்கு முன்கூட்டியே விருப்ப ஓய்வு அளிப்பது, ஊதிய உயர்வை நிறுத்திவைப்பது போன்ற நடவடிக்ைககள் எடுக்கப்பட்டுள்ளன. 

கடந்த 3 ஆண்டுகளில் மத்திய பணியாள்துறை எடுத்த நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடியிடம் சமீபத்தில் அறிக்கை அளித்தது. அந்த அறிக்கையில் இந்த விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது-

மத்திய அரசின் நிர்வாகத்தில் நம்பிக்கையையும் உறுதி செய்யவும், ஒழுக்கத்தையும், திறமையை மேம்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஊழியர்கள் சிறப்பாக பணியாற்றவும், அவர்களின் பணித்திறனில் சாதகமான முன்னேற்றத்தையும் உண்டாக்க எடுக்கப்பட்டுள்ளது. 

இதன்படி,ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ். ஐ.எப்.எஸ். அதிகாரிகள் 2 ஆயிரத்து 953 பேர் உள்ளிட்ட குரூப் ஏ பிரிவில் 11 ஆயிரத்து 828 அதிகாரிகளின் பணித்திறன் மறு ஆய்வு செய்யப்பட்டது. மோசமாகவும், ஊழல் செய்து வந்த குரூப் பி பிரிவில் 19 ஆயிரத்து 714 அதிகாரிகளின் பணித்திறனும் மறு ஆய்வு செய்யப்பட்டது. இதன் அறிக்கை பிரதமர் மோடியிடம் அளிக்கப்பட்டு, 381 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

இதில் குரூப் ஏ பிரிவில் 25 அதிகாரிகள் அடங்கும். இதில் ஒரு ஐ.ஏ.எஸ்., 2 ஐ.பி.எஸ்., மற்றும் குரூப் பி பிரிவில் 99 அதிகாரிகளுக்கு ஓய்வு காலத்துக்கு முன்கூட்டியே விருப்ப ஓய்வு அளிக்கப்பட்டது. 

21 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை வேலையை ராஜினாமா செய்யக்கோரி வலியுறுத்தப்பட்டது. மேலும்,குரூப் ஏ பிரிவில் 37 அதிகாரிகளுக்கு அபராதம், பணிநீக்கம், கட்டாய ஓய்வு, ஓய்வூதியம் நிறுத்தி வைப்பு ஆகிய தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. 

மேலும், 8 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உள்ளிட்ட 199 குரூப் ஏ அதிகாரிகளின் ஊதிய உயர்வும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தவறு செய்யும் அதிகாரிகளை அரசு தண்டிக்கும் என்று உணர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.