24 hours a breach of the 3-time - the Indian attack on Pakistani Military
ஜம்மு காஷ்மீரில் 24 மணி நேரத்தில் 3-வது முறையாக பாகிஸ்தான் ராணுவம் நேற்று அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. இதையடுத்து எல்லைப் பகுதியில் ராணுவம் உஷார்படுத்தப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளை தூண்டிவிட்டு பாகிஸ்தான் ராணுவம் மறைமுகப் போரில் ஈடுபட்டு வருகிறது. அங்குள்ள இளைஞர்களை சமூக வலைதளங்கள் மூலமாக தவறான பாதைகளுக்கு அழைத்துச் சென்று இந்தியாவுக்கு எதிராக தாக்குதல் நடத்த பாகிஸ்தான் சதி செய்கிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.
கல்வீச்சில் ஈடுபட்ட காஷ்மீர் இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், நேற்று முன்தினம் காலை 9.30-க்கு பூஞ்ச் செக்டாரில் உள்ள திக்வார் பகுதியில் ராணுவ நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர்.
இதில் தானியங்கி துப்பாக்கிகள், பீரங்கி குண்டுகள் பயன்படுத்தப்பட்டன. இதன் தொடர்ச்சியாக ரஜவ்ரி மாவட்டத்தில் உள்ள பலகோட் பகுதியில் நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு மீண்டும் பாகிஸ்தான் அத்துமீறியது.
இந்த இரு தாக்குதல்களுக்கு இந்திய ராணுவம் தரப்பில் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது. இந்த நிலையில், 24 மணி நேரத்தில் 3-வது முறையாக நேற்று காலை 11 மணிக்கு ரஜவ்ரி மாவட்டத்தில் உள்ள பிம்பெர் காலி பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறியது.
இதுகுறித்த ராணுவ செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘சிறிய ரக ஆயுதங்கள், தானியங்கி துப்பாக்கிகள், பீரங்கி குண்டுகள் ஆகியவற்றை பயன்படுத்தி பாகிஸ்தான் வீரர்கள் நேற்று காலை 11 மணிக்கு தாக்கினர். இதையடுத்து ராணுவம் உஷார்படுத்தப்பட்டு பாகிஸ்தான் வீரர்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது’ என்றார்.
கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் பாகிஸ்தான் ராணுவம் 4 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் 228 முறை பாகிஸ்தான் வீரர்கள் இந்திய பகுதிகளை குறிவைத்து தாக்கியுள்ளனர்.
