23 year old woman kidnapped gangraped murdered mutilated in Haryana two arrested

டெல்லியில் நிர்பயாவுக்கு நடந்ததை போன்று அரியானா மாநிலத்தில் பெண் ஒருவர் 7 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொடூர செயலுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

முதலில் கடத்தல்

டெல்லியில் கடந்த 2012 டிசம்பர் 16-ந்தேதி நிர்பயா என்ற பெண் ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பி்ன்னர் தூக்கி வீசப்பட்ட அவர் உயிரிழந்தார். இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட 6 பேரில் ஒருவர் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஒருவர் சிறுவன் என்பதால் அவரை சீர்திருத்த பள்ளிக்கு நீதிபதிகள் அனுப்பி வைத்தனர். மீதமுள்ள 4 பேருக்கும் தற்போது தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், இதேபோன்ற சம்பவம் அரியானாவில் கடந்த வியாழன் அன்று நடந்துள்ளது. சோனிபட் நகரை சேர்ந்த 23 வயதான இளம் பெண் ஒருவர் கடந்த 9-ந்தேதி கடத்தப்பட்டார்.

தெருநாய்கள் கடித்தன

அவர் விவகாரத்து பெற்றவர். இளம்பெண் கடத்தப்பட்டது தொடர்பாக அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இதற்கிடையே அவரை கடத்திய 7 பேர் கொண்ட கும்பல், அந்த இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது. பின்னர் அவரை தாக்கி அந்த கும்பல் படுகொலை செய்தது. இந்நிலையில், ரோதக் பகுதியில் உயிரிழந்த இளம்பெண்ணின் சடலம் வீசப்பட்டிருந்தது. காயங்களுடன் காணப்பட்ட அந்த சடலத்தை தெருநாய்கள் கடித்துக் கொண்டிருந்தன.

2 பேர் கைது - விசாரணை

இதனைக் கண்டவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள், சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து சோனிபட் மாவட்ட எஸ்.பி. கூறும்போது, பலாத்காரம் மற்றும் கொலை தொடர்பாக சுமித், விகாஸ் என்ற 2 பேரை கைது செய்துள்ளோம். இவர்களில் சுமித் என்பவன் கொல்லப்பட்ட இளம்பெண்ணை நன்கு அறிந்தவன். முதலில் பலாத்காரம் செய்த கும்பல், பின்னர் அவரை செங்கல் போன்ற பொருளால் தாக்கி கொலை செய்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றோம் என்றார்.

 ‘நாட்டின் மனசாட்சியை உலுக்கிய சம்பவம்’

இந்த சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரியானாவில் இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டிருப்பது நாட்டின் மனசாட்சியை உலுக்கியுள்ளது. அவரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டில் பெண்கள் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை அறிந்து ஒவ்வொருவரும் செயலாற்ற வேண்டும். குற்றவாளிகள் மீது அரியானா அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன் என கூறியுள்ளார்.