கடந்த 2016ம் ஆண்டு, ரூபாய் நோட்டு தடையின் போது அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ரூ.2 ஆயிரம் நோட்டு அச்சடிப்பு பணி திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. அதே சமயம், அடுத்த மாதம், புதிய ரூ.200 நோட்டுகளை வௌியிடும் நோக்கில் ரிசர்வ் வங்கி தீவிரமாக அச்சடிக்கும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.

நாட்டில் கருப்புபணம், கள்ள நோட்டகளை ஒழிக்கும் வகையில், புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என பிரதமர் மோடி கடந்த ஆண்டு நவம்பர் 8-ந்தேதி அறிவித்தார். அதைத் தொடர்ந்து, புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகளை அறிமுகப்படுத்தப்பட்டன.

இந்த நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டது முதல் சில்லரைத் தட்டுப்பாடு அதிகரிக்கத் தொடங்கியது. புதிய ரூ.500 நோட்டுகள் வந்தபோதிலும், ரூ.100, ரூ.50 நோட்டுகள் இல்லாமல் மக்களும், வர்த்தகர்களும் பெரிதும் சிரமப்பட்டனர். இதையடுத்து, டிஜிட்டல் பரிமாற்றத்துக்கு மாற மத்திய அரசு மக்களை ஊக்கப்படுத்தியது.

இந்நிலையில், சில்லரை தட்டுப்பாட்டை போக்கும் வகையில், புதிய ரூ.200 நோட்டுக்கள் அச்சடித்து புழக்கத்தில் விடப்படும் என ரிசர்வ் வங்கி சமீபத்தில் அறிவித்து இருந்து. அதற்கு ஏற்றார் போல், அச்சிடும் பணிகளை துரிதப்படுத்தியுள்ளது.

அதே சமயம், கடந்த 5 மாதங்களாக ரூ.2000 நோட்டு அச்சடிக்கும் பணியை ரிசர்வ் வங்கி நிறுத்திவிட்டதாகவும், மிக விரைவில் ரூ. 2000 நோட்டுகள் நிறுத்தப்படலாம் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு ரூபாய் நோட்டு தடை கொண்டுவரப்படும் போது, ரூ.1000 நோட்டுகள், 630 கோடி எண்ணிக்கையில் புழக்கத்தில் இருந்தன. இதற்கு ஈடாக, 370 கோடி எண்ணிக்கையிலான ரூ.2 ஆயிரம் நோட்டுகள் அச்சடித்து புழக்கத்தில் விடப்பட்டன. இதன் மதிப்பு ரூ.7.4 லட்சம் கோடியாகும்.

அதேபோல, பழைய ரூ.500 நோட்டுகள் ஆயிரத்து 570 கோடி எண்ணிக்கையில் புழக்கத்தில் இருந்தன, அதை செல்லாததாக அறிவித்துவிட்டு, புதிய ரூ.500 நோட்டுகள் 1400 கோடி எண்ணிக்கையில் அச்சடித்து வௌியிடப்பட்டன.

பெரும்பாலான ஏ.டி.எம்.களில் இன்று ரூ.2 ஆயிரம் நோட்டுகளே அதிகமாக புழக்கத்தில் உள்ளன, சில்லரை தட்டுப்பாடு என்பது கடுமையாக இருக்கிறது என்று சமீபத்தில் ஸ்டேட் வங்கி வௌியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூபாய் நோட்டு தடைக்கு முன்பாக வங்கிகளல் 3.8 சதவீதம் இருந்த ரொக்கப்பணப் புழக்கம் இப்போது, 5.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது பெரும்பாலும், ரூ.2 ஆயிரம் நோட்டுகளாகவே இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.