உயிரிழந்தவரின் உடலில் இருந்து தங்க நகைகளை திருடிய சம்பவம் வேலூரில் நடந்துள்ளது. துக்க வீட்டில் விசாரிக்க சென்ற யாரோ ஒருவர்தான் இதனை செய்திருக்க வேண்டும் என்றும், இது குறித்து போலீசிலும் புகார் செய்யப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம், திருப்பத்தூரைச் சேர்ந்தவர் பிரபு. இவர்து தாயார் வசந்தி (47), மாரடைப்பு காரணமாக நேற்று முன்தினம் உயிரிழந்தார். அவரது இறப்பை அடுத்து, இறுதி சடங்கு செய்வதற்கான பணிகள் நடந்தது.

வெள்ளிக்கிழமை இறந்ததால், வசந்தியின் கழுத்தில் இருந்து தாலிச்சரடு, செயின் உள்ளிட்டவைகளை எடுக்க வேண்டாம் என்றும் சுடுகாட்டில் வைத்து அவைகளை எடுத்துக் கொள்ளலாம் என்றும் உறவினர்கள் முடிவு செய்தனர்.

வசந்தியின் இறப்புக்கு உறவினர்கள் கண்ணீர் மல்க, அவரது உடல் மீது அழுது புரண்டனர். சுடுகாட்டுக்கு உடல் கொண்டு செல்லும்போதுகூட சிலர் சடலத்தை பிடித்துக் கொண்டு அழுதபடி சிறிது தூரம் வந்துள்ளனர். 

சுடுகாட்டுக்கு வந்த பிறகு, சடலத்தை தகனம் செய்யும் பணி நடைபெற்றது. பின்னர், வசந்தியின் உடலில் இருந்து நகைகளை கழற்ற உறவினர்கள் முயன்றனர். அப்போது வசந்தியின் காதில் இருந்த கம்மல் மற்றும் மூக்குத்தி மட்டுமே இருந்துள்ளது. ஆனால், அவர் அணிந்திருந்த தாலி சரடு மற்றும் தங்க சங்கிலி இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

வசந்தி இறப்புக்கு வருந்துவது போல் நடித்த யாரோ ஒருவர்தான், நகைகளைத் திருடிச் சென்றிருக்க வேண்டும் என்று உறவினர்கள் அறிந்தனர். சடலைத்தை எரித்த பின்பு, அவர்கள் திருப்பத்தூர் போலீஸ் நிலையம் சென்று புகார் ஒன்றையும் அளித்துள்ளனர்.