மகாராஷ்டிராவின் துலே பகுதியில் செயல்பட்டு வரும் ரசாயன ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 20 பேர் உயிரிழந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், மும்பை அருகே, துலே பகுதியில், ரசாயண ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தால், பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் வானை முட்டும் அளவிற்கு புகை மூட்டம் எழுந்தது. இந்த வெடிவிபத்தில் 20 பேர் உயிரிழந்திருக்கலாம் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த வெடி விபத்தில் 40 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பெரும் புகை மூட்டம் காரணமாக பொதுமக்களுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டது.

இது குறித்து தகவலறிந்ததும் அங்கு தீயணைப்பு வாகங்கள் விரைந்துள்ளன. ரசாயண ஆலையில் சிலிண்டர்கள் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேபோல் குஜராத் மாநிலம் சூரத் நகரின் பந்தேசரா பகுதியில் உள்ள ஒரு ஜவுளி தொழிற்சாலையில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 

தீ மளவெனப் பரவி கொழுந்துவிட்டு எரிந்ததால் அப்பகுதி முழுவதும் கரும்புகை மூட்டம் எழுந்தது. ஆலையின் ஒரு பகுதியில் தீப்பிடிக்கத் தொடங்கியதும் ஊழியர்கள் அவசரம் அவசரமாக வெளியேறினர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த  தீயணைப்பு படையினர், 18 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 

இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல் இல்லை. பல லட்சம் ரூபாய் மதிப்பிலான ஜவுளி மற்றும் மூலப்பொருட்கள் கருகியிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.