கர்நாடக முதல்வராக எடியூரப்பா மட்டுமே பதவியேற்ற நிலையில், 25 நாட்களுக்கு பிறகு அமைச்சர்கள் 17 பேர் பதவியேற்றுக்கொண்டனர். 

கர்நாடகத்தில் கடந்த 14 மாதங்களாக நடைபெற்று வந்த முதல்வர் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ்-மஜத கூட்டணி அரசு ஜூலை 23-ம் தேதி பெருபான்மையை நிரூபிக்க முடியாமல் கவிழ்ந்தது. இதனையடுத்து, பாஜக மாநிலத் தலைவரான எடியூரப்பா முதல்வராக ஜூலை 26-ல் பதவியேற்றார்.

 

இதையடுத்து, சட்டப்பேரவையில் ஜூலை 29-ம் தேதி நடைபெற்ற தனது அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா வெற்றி பெற்றார். அவரைத் தவிர, அமைச்சராக யாரும் பதவியேற்காததால்,  கர்நாடகத்தில் ஏற்பட்ட வெள்ள நிவாரணப் பணியை எடியூரப்பா தனி ஆளாக கவனித்து வந்தார். கடந்த 25 நாட்களாக தனியாக அமைச்சரவையை நடத்தி வந்த எடியூரப்பாவை காங்கிரஸ், மஜத உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர். 

இதைத் தொடர்ந்து, அமைச்சரவையை அமைக்க எடியூரப்பா தொடர்ந்து முயற்சி மேற்கொண்டிருந்தார். கடந்த ஆகஸ்ட் 16-ம் தேதி டெல்லி சென்றிருந்த எடியூரப்பா, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவை சந்தித்து அமைச்சரவை அமைப்பதற்கான ஒப்புதல் பெற்று திரும்பினார். 

இதைத்தொடர்ந்து, பெங்களூரில் உள்ள ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் 17 பேர் பதவியேற்றுக்கொண்டனர். ஜெகதீஷ் ஷெட்டர், ஈஸ்வரப்பா, ஸ்ரீகோவிந்த் மக்தப்பா கரஜோல், அஸ்வத் நாராயண், லக்ஷ்மண் சங்கப்பா சாவடி, அசோகா, ஸ்ரீராமுலு, சுரேஷ் குமார், சோமன்னா, சி.டி.ரவி, பசவராஜ் பொம்மை, கோட்டா ஸ்ரீவாஸ் பூஜாரி, மதுஸ்வாமி, சந்திரகாந்த கவுடா, நாகேஷ், பிரபு சவுகான், ஜோலி சசிகலா அன்னா சாகேப் ஆகிய 17 பேர் கேபினட் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுக்கு கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலா பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார். எடியூரப்பா அரசுக்கு ஆதரவு தெரிவித்து வந்த சுயேச்சை எம்.எல்.ஏ நாகேஷூம் அமைச்சராக பதவியேற்று கொண்டார்.