மகாராஷ்டிராவில் அரசு பேருந்தும் கண்டெய்னர் லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 15 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 20 பேர் படுகாயமடைந்தனர்.  

மகாராஷ்டிரா மாநிலம் துலே மாவட்டத்தில் இருக்கிறது நிம்குல் கிராமம். இங்குள்ள ஷஹாடா-தொண்டச்சா நெடுஞ்சாலையில் நள்ளிரவு அவுரங்காபாத் நோக்கி, பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்திசையில் இருந்து கண்டெய்னர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக பேருந்து மீது கண்டெய்னர் லாரி பயங்கரமாக மோதியது. 

இதில், லாரி ஓட்டுநர் மற்றும் பேருந்து ஓட்டுநர் உள்பட 15 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 20 பேர் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.