திருப்பதி ஏழுமலையான் கோவில் உலக பிரசித்தி பெற்றது. பணக்கார கடவுளாக அறியப்படும் ஏழுமலையானை தரிசிக்க இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகிறார்கள்.

திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் காணிக்கையாக பணம் மற்றும் நகைகளை செலுத்தி வருகிறார்கள். தினமும் ஆயிரக்கணக்கில் வரும் பக்தர்களால் காணிக்கை உண்டியல்கள் நிரம்பி காணப்படும்.

இவ்வாறு வரும் காணிக்கைகள் மாதமாதம் எண்ணப்பட்டு எவ்வளவு நகை மற்றும் பணம் வந்திருக்கிறது என்று தேவஸ்தானம் சார்பாக வெளியிடப்படும். சமீபத்தில் காணிக்கைகளை கணக்கிடும் பணியாளர்கள் குறைந்ததால் சில மாதங்களாக இந்த பணியில் தொய்வு ஏற்பட்டது.

இதனால் 800 மூட்டைகளுக்கு மேல் காணிக்கைகைள் சேர்ந்தது. இதன்காரணமாக தேவஸ்தான ஊழியர்களுடன் கல்லூரி மாணவர்களையும் சேர்த்து எண்ண முடிவு செய்யப்பட்டது.

அதன்படி எண்ணப்பட்டதில் ஜூலை மாதம் மட்டும் 130 கிலோ தங்கம் சேர்ந்துள்ளது. பணமாக 106 கோடி ரூபாய் வந்திருக்கிறது. ஆகஸ்ட் மாதத்தில் 108 கோடி ரூபாய் காணிக்கையாக வந்துள்ளது.